November 10, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > இயற்கை வேளாண்மை மற்றும் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் பயிற்சிச் செயலமர்வு

இயற்கை வேளாண்மை மற்றும் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் பயிற்சிச் செயலமர்வு

(வி.ரி.சகாதேவராஜா)

மனித அபிவிருத்தி தாபனம் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வரும் இயற்கை வேளாண்மைச் செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பயிற்சிச் செயலமர்வு  கல்முனை கிறிஸ்தா இல்ல மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

மனித அபிவிருத்தி தாபனத்தின் பணிப்பாளர் திருமதி பி. லோகேஸ்வரி  தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் வளவாளர்களாக காரைதீவு விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட விவசாயப் போதனாசிரியருமான ஆர். விஜயராகவன் மற்றும் கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாயப் போதனாசிரியர்  ரி. செந்தூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனித அபிவிருத்தி தாபனம் அம்பாறை மாவட்டத்தில் இயற்கை வேளாண்மைச் செயற்றிட்டத்தின் ஊடாக இயற்கை விவசாயம், உணவுப் பாதுகாப்பு, உணவுப் பதப்படுத்தல் மற்றும் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான பொருளாதார அபிவிருத்திச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இச்செயற்றிட்டத்தின் கீழ், மனித அபிவிருத்தி தாபனத்துடன் இணைந்து செயற்படும் கிராம மட்டச் சங்கங்களின் அங்கத்தவர்களில் சுயதொழிலில் ஈடுபட விரும்புவோர், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் முறைசாராத் தொழில்களில் ஈடுபடுவோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் தொழில்திறன் மற்றும் பொருளாதார ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்காக இயற்கை விவசாயம் மற்றும் அதன் நன்மைகள், பாதுகாப்பான உணவு உற்பத்தி, உற்பத்திகளைச் சந்தைப்படுத்துதல் மற்றும் அதற்குத் தேவையான அரச அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான பயிற்சிச் செயலமர்வு இதுவாகும்.

இதன்போது, மனித அபிவிருத்தி தாபனத்தின் பணிப்பாளர் திருமதி பி. லோகேஸ்வரி கருத்துத் தெரிவிக்கையில்,

 மனித அபிவிருத்தி தாபனம் குறிப்பாகக் கிராமப்புறங்கள் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் பெண்களின் சமூகப் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இயற்கை உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதன் ஊடாக அவர்களைச் சுயதொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கும் இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், முறைசாராத் தொழில்களில் ஈடுபடும் பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தும் நோக்கில், ‘இலங்கையில் முறைசாராத் தொழில்துறை: பிரச்சினைகளும் உபாயங்களும்’ என்ற தலைப்பிலான மக்கள் பிரகடனமொன்றை வெளியிட்டுள்ளதாகவும், அதனைச் சட்டமாக்குவதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இப்பயிற்சிச் செயலமர்வுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மனித அபிவிருத்தி தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம். ஐ. றியாழ் மேற்கொண்டிருந்தார். இப்பயிற்சியில் தெரிவு செய்யப்பட்ட 30 சுயதொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *