November 10, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > Brampton BRAC அமைப்பின் “தலைவரின் உயரிய சிறப்பு விருது” பெற்றார் சமூக சேவையாளர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை (விசு)

Brampton BRAC அமைப்பின் “தலைவரின் உயரிய சிறப்பு விருது” பெற்றார் சமூக சேவையாளர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை (விசு)

சௌவியதாசன்.

கனடா வாழ் தமிழர் சமூகத்தில் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மிக்க தலைமைத்துவம் மற்றும் மனிதநேயப் பணிகளின் மூலம் தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ள விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை (விசு) அவர்கள், அண்மையில் BRAC அமைப்பினால் வழங்கப்பட்ட“தலைவரின் உயரிய சிறப்பு விருது” பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார். BRAC அமைப்பின் தலைவர் குரியன் அவர்கள் வழங்கிய இந்த உயரிய விருது, பல தசாப்தங்களாக அவர் மேற்கொண்டு வரும் சமூகப் பணிகளுக்கான சிறப்பான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

இந்த விருது மட்டுமல்லாது, சமூக சேவையில் அவர் ஆற்றிய அரிய பங்களிப்புகளுக்காக அண்மைக் காலங்களில் மேலும் இரண்டு முக்கியமான உயரிய கௌரவங்களும் அவரை வந்தடைந்துள்ளன. அதாவது, ஒன்டாரியோ அரசின் 25 ஆண்டுகால சமூக மற்றும் பொதுச்சேவைக்கான Long Service Award, மற்றும் பிராம்ப்டன் நகரின் 35 ஆண்டுகால தன்னார்வ மற்றும் சமூகப் பணிகளுக்கான Long Service Award ஆகிய கௌரவங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சமூக நலனில் அவர் வெளிப்படுத்திய தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் நீண்டகால சேவையையும் இந்த விருதுகள் வெளிப்படுத்துகின்றன.

குறிப்பிடத்தக்க வகையில், மேற்கூறிய மூன்று உயரிய விருதுகளுக்குமான பரிந்துரைகளையும் கனடா அரசின் மூத்த அதிகாரியும், சர்வதேச அளவில் மதிக்கப்படும் FCPA (Fellow Chartered Professional Accountant) என்ற உயரிய தொழில்முறை பட்டத்தைப் பெற்றவருமான லங்கேஸ்வரன் தர்மலிங்கம் அவர்கள் முன்வைத்திருந்தார். பல ஆண்டுகளாக விசு அவர்களின் சமூகப் பணிகளை நேரடியாகக் கவனித்து அறிந்திருந்த அவர், விசுவின் அர்ப்பணிப்பு, தலைமைத்துவம், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் மனிதநேயச் சேவைகளை விரிவாக எடுத்துரைத்து இந்த பரிந்துரைகளைச் சமர்ப்பித்திருந்தார்.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் பிறந்து வளர்ந்த விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள், 1993 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்த பின்னரும் சமூக சேவையை தனது வாழ்வின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார். புதிய குடியேற்றவாசிகள், அகதிகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள் மற்றும் உதவி தேவைப்படும் சமூக உறுப்பினர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக புதிய குடியேற்றவாசிகள் கனடிய வாழ்க்கை முறை, குடியேற்ற நடைமுறைகள், வேலைவாய்ப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றை புரிந்துகொள்ள உதவிய அவரது சேவைகள் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளன.

விசு அவர்கள் நிறுவிய Helping Golden Hands அமைப்பு கடந்த பல ஆண்டுகளாக இலங்கை மற்றும் கனடாவில் மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கல்வி உதவிகள், ஏழை மாணவர்களுக்கான கற்றல் வளங்கள், புத்தகங்கள், உடைகள், உணவுப் பொருட்கள், மருத்துவ உதவிகள் மற்றும் அவசர நிவாரண உதவிகளை வழங்குவதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இலங்கை உள்நாட்டு போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டியும் பல்வேறு உதவிகளை வழங்கியும் அவர் அரிய சேவைகளை மேற்கொண்டுள்ளார்.

அதேபோல், Paadum Meengal Association of Canada அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்து தமிழ் கலை, கலாசாரம் மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளார். மேலும் Swami Vipulananda Arts Society Canada, ChiDAES Canada, St. Cecilia’s Convent Alumni Association – North America உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் நிர்வாக சபை உறுப்பினராக இருந்து கல்வி, கலாசாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான முக்கிய நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்காற்றி வருகிறார்.

பிராம்ப்டன் மற்றும் GTA பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு சமூக நலத்திட்டங்கள், நிதி திரட்டும் நிகழ்வுகள், மருத்துவமனை உதவி திட்டங்கள் மற்றும் தேர்தல் தன்னார்வப் பணிகளில் அவர் வகித்த தலைமையுரிமை பரவலாக அறியப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு பிராம்ப்டனில் நடைபெற்ற Walkathon நிகழ்ச்சியில் முக்கிய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, பிராம்ப்டன் சிவிக் மருத்துவமனைக்காக நிதி திரட்டுவதிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.

அவரது சேவைகள் கனடாவில் மட்டும் மட்டுப்படாமல் இலங்கையிலும் பரவியுள்ளன. கிழக்கு இலங்கையின் பல பாடசாலைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், வறிய மாணவர்களின் கல்விச் செலவுகளை ஆதரித்தல், உணவு மற்றும் உடை உதவிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கியுள்ளார்.

ஏற்கனவே Queen Elizabeth Platinum Volunteer Community Service Award, City of Brampton Citizenship & Community Volunteer Services Award, பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், இந்து ஆலயங்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்களின் அங்கீகார விருதுகளைப் பெற்றுள்ள விசு அவர்களுக்கு தற்போது கிடைத்துள்ள BRAC அமைப்பின்“தலைவரின் உயரிய சிறப்பு விருது”, ஒன்டாரியோ அரசின் 25 ஆண்டுகால Long Service Award, மற்றும் பிராம்ப்டன் நகரின் 35 ஆண்டுகால Long Service Award ஆகிய மூன்று உயரிய கௌரவங்களும் அவரது வாழ்நாள் சமூகப் பணிகளுக்கான சிறந்த அங்கீகாரங்களாகக் கருதப்படுகின்றன.

சமூக சேவையை ஒரு பொறுப்பாக அல்ல, ஒரு வாழ்வியல் பணியாகக் கொண்டு செயல்பட்டு வரும் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை (விசு) அவர்கள், கனடா வாழ் தமிழர்களின் பெருமைமிகு சமூகத் தலைவர்களில் ஒருவராக இன்று மதிக்கப்படுகிறார். அவர் பெற்றுள்ள இந்த தொடர்ச்சியான கௌரவங்கள், அவரது அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அயராத உழைப்பிற்கு வழங்கப்பட்ட தகுதியான பாராட்டாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *