( வி.ரி. சகாதேவராஜா)
அரசைப் பாதுகாக்கும் புதிய பயங்கரவாத தடைச் சட்ட மூலம் மிக மிக மோசமானது. தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்கக் கூடியது.எமது கோரிக்கை தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டுமே தவிர மாற்றீடாக எந்த சட்டமும் தேவையில்லை என்பதே.
எனவேதான் நாங்கள் அதனை தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றோம்.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கான பிரிவுகளுக்கான விசேட கூட்டம் வியாழக்கிழமை காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவம் பாக்கியநாதன், காரைதீவு தவிசாளர் சு.பாஸ்கரன், நாவிதன்வெளி தவிசாளர் இ. ரூபசாந்தன், ஆலையடிவேம்பு தவிசாளர் பி.தர்மதாஸ உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முன்னாள் காரைதீவு தவிசாளர் கே. ஜெயசிறில் உள்ளிட்ட சில பிரதிநிதிகள் சில கருத்துக்களை முன் வைத்தனர்.
அங்கு சுமந்திரன் மேலும் உரையாற்றுகையில் –
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் கடந்த 47 வருடங்களாக தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நாம் அதனை தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றோம்.
அப்பொழுது எதிர்க்கட்சியில் இருந்த ஜேவிபி கூட முழுமையாக எங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டது.
அன்று இச்சட்டம் தமிழ் இளைஞர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது போல தோன்றினாலும், 1989 90களில் ஜேவிபி இரண்டாவது கிளர்ச்சியின் போது அவர்களும் பாதிக்கப்பட்டார்கள். அதனால் அவர்கள் ஆட்சி பீடம் ஏறும் வரை தொடர்ச்சியாக எதிர்த்து வந்தார்கள். ஆனால், அதே ஜேவிபியினர் தான் இன்று இந்த மிக மோசமான புதிய சட்டமூலத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கின்றார்கள்.
இந்த சட்டமூலத்தை நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனையை கூட விதித்திருந்தது. அப்பொழுதுதான் ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை வழங்க முடியும் என்று .
இந்த வேளையிலே ஐரோப்பிய ஒன்றியத்தை திருப்தி படுத்துவதற்காக சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப புதிதாக ஒரு சட்டமூலத்தை தருகின்றோம் என்று சொன்னார்கள். அதுதான் இது.
ஆரம்ப காலகட்டத்திலே பயங்கரவாத தடைச் சட்டம் என்று ஒன்றைக் கொண்டு வந்தார்கள் .அது நிறைவேறவில்லை. பின்பு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்று கொண்டு வந்தார்கள். அதுவும் நிறைவேறவில்லை.
இறுதியாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற ஒன்றை இன்று வரை ஏற்படுத்தினார்கள்.
அது இப்பொழுது நீக்கப்படப் போகின்றது என்ற வேளையிலே புதிதாக அதைவிட மோசமான ஒரு சட்டமூலத்தை இப்பொழுது இந்த அரசாங்க முன் வைத்து இருக்கின்றது .
எமது கோரிக்கை இச் சட்டம் நீக்கப்பட வேண்டும் தவிர மாற்றீடாக எந்த சட்டமும் தேவையில்லை என்பதே. எனினும் நாங்கள் இவர்கள் நடாத்திய அனைத்து பேச்சு வார்த்தைகளிலும் பங்கு பற்றியிருந்தோம். எமது எதிர்ப்பையும் தெரிவித்து இருந்தோம் .கடந்த காலங்களிலே ஜேவிபி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆனால் இறுதியிலே இவ்வாறு நடந்து கொள்கின்றது .
புதிய பயங்கரவா தடைச் சட்டம் மிகவும் மோசமானது என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம்.
தற்போது இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய வேண்டுமாக இருந்தால் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் அனுமதி பெறப்பட வேண்டும். அந்த அனுமதி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு குறையாத தரத்தில் உள்ளவருக்கு வழங்கி அவர் கைது செய்யலாம்.
ஆனால் புதுச் சட்டத்தின் படி ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்யலாம் .அவர் மாத்திரம் அல்ல முப்படையினரும் கைது செய்யக்கூடிய சந்தர்ப்பம் இங்கு இருக்கின்றது .
மேலும், அரசாங்கத்திற்கு எதிராக எதைச் செய்தாலும் பயங்கரவாதம் என்ற போர்வையில் தடுத்து வைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது .
அரசாங்கத்துக்கு எதிரான எந்த வித போராட்டமும் செய்ய முடியாத ஒரு நிலை ஏற்படும் .எதனையும் பயங்கரவாதம் என்று சொல்லலாம். குறிப்பாக அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்களை எல்லாம் தடை செய்யும் உரிமையும் ஜனாதிபதிக்கு இதன் மூலம் வருகின்றது.
பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி எதையும் செய்யக்கூடிய ஒரு வல்லமை இந்த புதிய சட்டமூலத்திற்கு இருக்கின்றது.
நாங்கள் கட்சி ரீதியாக தொடர்ச்சியாக எதிர்த்து வந்திருக்கின்றோம். உச்சநீதிமன்றத்திலே வழக்கும் போடப்பட்டிருக்கின்றது .இன்னும் தீர்ப்பு வரவில்லை.
உதாரணமாக இந்த புதிய சட்டத்தின் கீழ் கைதான ஒருவருக்கு பிணை கொடுப்பதற்கு அல்லது அதை விடுவிப்பதற்கு நீதவானுக்கு அதிகாரம் இல்லாத ஒரு நிலையும் இதில் இருக்கின்றது .
எனவே இவற்றை நாங்கள் நிச்சயமாக எதிர்க்க வேண்டும். உள்ளுராட்சி மன்றங்களும் இதிலே கூடுதலான பங்களிப்பை செய்ய வேண்டும்.
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருப்பதால், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது. இத்தகைய சூழலில், இந்த புதிய பயங்கரவாத சட்டம் மேலும் படுகுழியில் தள்ளும் என்பதிலேயே மறு கருத்தில்லை. என்றார்.




