இலங்கையில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி (01.11.2026) முதல் வங்கிக் கணக்குகளைத் திறத்தல், வாகனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட எட்டு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழை (TIN Certificate) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திலும் புதிய கணக்கொன்றைத் திறத்தல், கட்டட நிர்மாணத் திட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல், மோட்டார் வாகனமொன்றைப் பதிவு செய்தல், வாகன வருமான அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல், காணி அல்லது காணி உரிமைப் பத்திரத்தைப் பதிவு செய்தல், வியாபாரமொன்றைப் பதிவு செய்தல், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டையொன்றைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகிய எட்டு நடவடிக்கைகளுக்கும் TIN சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்யும் சந்தர்ப்பத்தில் பங்குகளை விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவர் ஆகிய இருவரும் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது அவசியமாகும்.
2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இலங்கையில் வசிக்கும் தனிநபர்கள் மற்றும் 2024 ஜனவரி முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் 18 வயதைப் பூர்த்தி செய்யும் இலங்கையில் வசிக்கும் தனிநபர்கள் TIN இலக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.ird.gov.lk ஊடாகப் பதிவு செய்துகொள்ள முடியும்.
மேலும், TIN சான்றிதழ் கைவசம் இல்லாதவர்கள், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழிச் சரிபார்ப்பு ஆவணத்தின் அச்சுப் பிரதியை மாற்று ஆவணமாகச் சமர்ப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது மட்டுமே ஒருவருக்கு வருமான வரி செலுத்தும் பொறுப்பை ஏற்படுத்தாது. வருமான வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஒருவரின் வருமானம் மற்றும் நடைமுறையிலுள்ள வரிச் சட்ட ஏற்பாடுகளைப் பொறுத்தது.
எனவே, நவம்பர் முதலாம் திகதி முதல் குறித்த சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் முன்கூட்டியே TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.