பாறுக் ஷிஹான்
அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட, அத்திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு பேரை அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் ஏசல பௌர்ணமி தினத்தன்று, அம்பாறையிலுள்ள கொண்டுவட்டுவான் குளத்திற்கு அருகே பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உகன பகுதியில் மற்றொரு பெண்ணின் தங்கச் சங்கிலியும் இதே பாணியில் கொள்ளையடிக்கப்பட்டது.
இச்சம்பவங்கள் குறித்து அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய விரிவான விசாரணைகளில், சங்கிலித் திருட்டில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் குற்றச் செயல்களின் பின்னர் கொழும்பு – கடுவெல பகுதிக்குத் தப்பிச் சென்று அங்கு பேருந்து சாரதியாகப் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர் திங்கட்கிழமை (12) அம்பாறைப் பகுதிக்குத் திரும்பியதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ‘அம்பாறை இன்’ விடுதிக்கு அருகில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கல்முனைத் தங்கக் கடையில் உருக்கப்பட்ட நகைகள் மீட்பு:
கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட சங்கிலிகளை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராகச் செயற்பட்ட அம்பாறை நகரிலுள்ள தங்கக் கடை ஊழியரொருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட இரண்டு சங்கிலிகளும் கல்முனையிலுள்ள பிரபல தங்கக் கடையொன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை அம்பலமானது. அதற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் கல்முனைத் தங்கக் கடைக்குச் சென்று, அங்கிருந்து உருக்கப்பட்ட நிலையிலிருந்த இரண்டு சங்கிலிகளையும் கைப்பற்றியதுடன், அக் கடையில் பணிபுரிந்த இருவரையும் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் சந்தைப் பெறுமதி சுமார் ஏழு இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சுஜித் வேடமுல்ல அவர்களின் உத்தரவின் பேரிலும், அம்பாறைப் பிராந்தியப் பொறுப்பான பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் (SSP) பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி அவர்களின் வழிகாட்டலிலும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையிலும் இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது என எமது செய்தியாளர் பாறுக் சிதான் தெரிவித்தார்..
இச்சோதனை நடவடிக்கையில் அம்பாறைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி தனுஷ்க ரத்நாயக்க, ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி முதித பிரியங்கர தலைமையில் பொலிஸ் கொஸ்தாபல்களான மக்பூல் (43383), சந்திரசேன (67667), ஜயம்பதி (2424), திஸாநாயக்க (86789), மதனசிங்க (35793), சஞ்சீவ (91287), சுனில் (95062) மற்றும் குணவர்தன (17478) ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

