சவுதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜனின் விடுதலை அல்லது தண்டனைக் குறைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தை இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டுசென்று, உரிய மனிதாபிமானத் தலையீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் திரு. நடராசா ரவிகுமார் அவர்களும், ஐக்கிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமும் நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான திரு. திருமேனி யோகநாயகன் அவர்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் முக்கிய கட்டமாக, இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களிடம் விசேட கோரிக்கை மனு கையளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்தர்ப்பத்தில், சிவராஜா அனோஜன் அவர்களின் விடுதலை அல்லது தண்டனைக் குறைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் தலையீட்டை நாடும் கோரிக்கை மனுவைத் திரு. நடராசா ரவிகுமார் அவர்கள், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களிடம் கையளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் தான் விசேட கவனம் செலுத்தி, இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களிடம் கோரிக்கையை முன்வைத்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மாண்புமிகு நயினார் நாகேந்திரன் அவர்கள் உறுதியளித்தார்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், நாளை மறுநாள் தமிழ்நாட்டுக்கு வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கோரிக்கை மனுவை நேரடியாகக் கையளித்து, திரு. அனோஜன் அவர்களின் விடுதலை அல்லது தண்டனைக் குறைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த உறுதிமொழியானது, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த முயற்சிகளில் முக்கியமான ஒரு முன்னேற்றமாக அமைந்துள்ளது. குறிப்பாக, இலங்கைப் பிரஜை ஒருவரின் உயிர் மற்றும் எதிர்காலம் தொடர்பான இவ்விவகாரம் இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படுவதற்கான வழி திறக்கப்பட்டுள்ளமை, அனோஜன் அவர்களின் குடும்பத்தினருக்கு நம்பிக்கையளிக்கும் விடயமாகும்.
இவ்விடயத்தின் மனிதாபிமானப் பரிமாணத்தை எடுத்துரைக்கும் வகையில், மாண்புமிகு நயினார் நாகேந்திரன் அவர்கள், ஐக்கிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் திரு. திருமேனி யோகநாயகன் அவர்களுடனும், திரு. சிவராஜா அனோஜன் அவர்களின் பெற்றோர்களுடனும் காணொளி அழைப்பின் ஊடாகக் கலந்துரையாடினார்.
இதன்போது, அனோஜன் அவர்களின் குடும்பத்தினர் எதிர்நோக்கும் துயரம், அவர்களின் கவலைகள் மற்றும் தங்களது மகனை மீண்டும் குடும்பத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற பெற்றோரின் உருக்கமான எதிர்பார்ப்பு ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன.
பெற்றோர்களுடன் நேரடியாக உரையாடி அவர்களின் வேண்டுகோளைக் கேட்டறிந்த தமிழக பாஜக தலைவர், இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
இந்தக் காணொளி உரையாடலுக்கு ஏற்பாடு செய்வதற்காக, திரு. திருமேனி யோகநாயகன் அவர்களுடன் சமூகச் செயற்பாட்டாளர் திரு. H.G. நிறோசன் அவர்களும் அனோஜன் அவர்களின் இல்லத்திற்குச் சென்றிருந்தனர். பெற்றோர்களின் கோரிக்கையை உரிய தரப்பினரிடம் நேரடியாக எடுத்துச் செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியும் இச்செயற்பாட்டின் முக்கிய அங்கமாக அமைந்தது.
தமிழக பாஜக தலைவர் மாண்புமிகு நயினார் நாகேந்திரன் அவர்கள் பிரதமரிடம் இக்கோரிக்கையை முன்வைப்பதாக வழங்கியுள்ள உறுதிமொழி, அனோஜன் அவர்களின் விடுதலைக்கான முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
திரு. சிவராஜா அனோஜன் அவர்கள் மீண்டும் தனது பெற்றோர்களுடன் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்பட வேண்டும் என்பதே இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.
இந்த நோக்கில் திரு. நடராசா ரவிகுமார், திரு. திருமேனி யோகநாயகன் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் திரு. H.G. நிறோசன் ஆகியோர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடரும். இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கோரிக்கை கொண்டுசெல்லப்பட்டு, அனோஜனுக்கு விடுதலை அல்லது ஆகக் குறைந்த தண்டனையுடன் விரைவில் விடுதலை கிடைக்க சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஜனாதிபதி அதிமேதகு அனுர குமார திசாநாயக்க அவர்களிடமும இலங்கையில் உள்ள சவுதி அரேபிய தூதுவர் ஊடாக மேன்மைபொருந்திய மன்னருக்கும் ஐக்கிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் திரு திருமேனி யோகநாயகன் அவர்களினால் உருக்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு மனித உயிரைக் காப்பாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். திரு. சிவராஜா அனோஜன் அவர்களுக்கு விடுதலை அல்லது தண்டனைக் குறைப்பு கிடைத்து, அவர் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணையும் நாள் விரைவில் அமைய வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.

