October 10, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > அஷ்ஷெய்க் F.M. அஹ்மதுல் அன்ஸார் மௌலானா நளீமியின் இழப்பு சமூகத்துக்கு பெரு வெற்றிடமே – அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் இரங்கல்

அஷ்ஷெய்க் F.M. அஹ்மதுல் அன்ஸார் மௌலானா நளீமியின் இழப்பு சமூகத்துக்கு பெரு வெற்றிடமே – அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் இரங்கல்

சமூக, சமயத் தலைவரும் கல்விமானும் ஆகிய மருதமுனையைச் சேர்ந்த அஷ்-ஷெய்க் F.M. அஹ்மதுல் அன்ஸார் மௌலானா நளீமி அவர்கள் நேற்று(09.10.2026) இறைவன் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

இந்த செய்தி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியத்தின் செயலாளரும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின்(MWRAF) முக்கிய செயற்பாட்டாளருமான அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்கள் ஊடகங்களுக்கு விடுத்த அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது அனுதாபச் செய்தியில் , அஷ்-ஷெய்க் F.M. அஹ்மதுல் அன்ஸார் மௌலானா நளீமி அவர்கள்
பள்ளிவாசல்கள், சமய, சமூக நிறுவனங்களில் அங்கத்துவம் வகித்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அயராது பங்களிப்பு செய்ததுடன் அறிவுப் பணிக்காக பல்வேறு நிகழ்வுகள் மூலம் சமூகத்தில் வாசிப்பு, அறிவு, மார்க்க சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்ப்பதில் அவர் காத்திரமாகப் பங்காற்றினார்.

ஒரு மார்க்க அறிஞரின் பணி பள்ளிவாசல் அல்லது மதப் போதனையுடன் மட்டும் நின்றுவிடாமல், சமூகத்தின் அறிவு மற்றும் ஒழுக்க வளர்ச்சியுடனும் இணைந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன எனக் கூறலாம்.

மேலும் மௌலானா பரம்ரையான இவர் தனது தந்தையின் பெயரில் “பழீல் மௌலானா பவுண்டேசன்”எனும் அமைப்பை நிறுவி தனது குடும்ப உறவுகளின் பங்களிப்பிகளினூடாகவும் பொதுப்பணிகள் பலவற்றை சிறப்பாக முன்கொண்டு சென்றார்.

ஜம்இய்யதுல் உலமா சார்பில் சமாதான பூங்கா (Peace Park) அமைக்கும் முயற்சி, அதற்கான Trustee Board அமைத்தல்,
சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற சமூக நல்லிணக்கப் பணிகளில் முன்னிலை வகித்தார்.

இவர் ஒரு மேடைப் பேச்சாளர் மட்டுமல்ல, ஊர் மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, ஜனாஸாத் தொழுகைகள், நிக்காஹ் மஜ்லிஸ்கள், சமாதான முயற்சிகள் என அனைத்திலும் முன்னின்று நற்பணி ஆற்றியவர்.

மேலும் அம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளனத்தினதும் சமாதானத்திற்கான இலங்கை சமயங்களின் அமைப்பினதும் மற்றும் சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியத்தின் முக்கிய பிரமுகராகவும் கடமையாற்றியதன் ஊடாக அனைத்து மத நல்லிணக்கங்களிற்காக குறிப்பாக தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்காக அயராது பாடுபட்டார்.

வல்ல அல்லாஹுத்தஆலா அன்னாருடைய பாவங்களை மன்னித்து, அவருடைய நற்கருமங்களைப் பொருந்திக் கொண்டு உயரிய ஜன்னதுல் பிர்தவ்ஸை அன்னாருக்கு வழங்குவானாக!


அன்னாருடைய பிரிவால் வாடும் அன்பு மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை இறைவன் வழங்க வேண்டும் என தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *