அனோஜன் சிவராசாவின் மரண தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு இன்று தாக்கல்!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவின் தண்டனையை இரத்துச் செய்யக் கோரும் மேன்முறையீடு இன்று சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த விவகாரம் தொடர்பில் சவூதி அரேபிய சட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்காக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அசாத் நவாவி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும, பைசர் முஸ்தபா ஆகியோர் அடங்கிய இலங்கை சட்டக் குழுவினர் கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பயணித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மேன்முறையீட்டைத் தாக்கல் செய்வது தொடர்பாக சவூதி அரேபிய சட்ட நிறுவனங்களுடன் குறித்த குழுவினர் நேற்று மேலதிக ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் ஊடாக சாதகமான தீர்வு கிடைக்காத பட்சத்தில், அனோஜன் சிவராசாவின் தண்டனையில் கருணை அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கோரி சவூதி அரேபிய மன்னரிடம் விசேட மனுவொன்றைச் சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியிடம் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை
அனோஜன் சிவராசாவின் விடுதலையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் என வலியுறுத்தி, ராமஞ்ஞ மகா நிகாய மற்றும் அமரபுர மகா நிகாய ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னணி
சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்தொன்றை அடிப்படையாகக் கொண்டு, அனோஜன் சிவராசாவுக்கு சவூதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால்கள் அபராதமும் விதித்திருந்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, சவூதி சட்ட அதிகாரிகள் எதிர் கோரிக்கையொன்றை முன்வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் பரிசீலித்த நீதிமன்றம், பின்னர் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா, தொழில் வாய்ப்பைத் தேடி ஒன்பது மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார்.
அவரது மரண தண்டனையை எதிர்த்து முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள மேன்முறையீட்டின் முடிவு தொடர்பில் அவரது குடும்பத்தினரும் இலங்கை மக்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.