October 10, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > சமயம், சமூகம், ஆன்மீகம் மற்றும் இன நல்லுறவு பணிகளில் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டவர் அஷ்ஷெய்க் அஹமதுல் அன்ஸார் மெளலானா – அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆழ்ந்த அனுதாபம்.!

சமயம், சமூகம், ஆன்மீகம் மற்றும் இன நல்லுறவு பணிகளில் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டவர் அஷ்ஷெய்க் அஹமதுல் அன்ஸார் மெளலானா – அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆழ்ந்த அனுதாபம்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சமயம், சமூகம், ஆன்மீகம் மற்றும் இன நல்லுறவு சார்ந்த பணிகளில் மிகவும் கரிசனையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட அஷ்ஷெய்க் எப்.எம். அஹமதுல் அன்ஸார் மெளலானா (நளீமி, எம்.ஏ) அவர்களின் திடீர் மறைவு சமூகத்திற்கும் பிராந்தியத்திற்கும் நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை உருக்கமான கவலையை வெளியிட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம், செயலாளர் ஏ.எல். நாஸிர் கனி ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

09.10.2026 ஆம் திகதி இரவு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தான எமது மூத்த உலமா அஹமது அன்ஸார் மௌலானா அவர்கள் வபாத்தான செய்தியறிந்து மிகவும் துயரமடைந்துள்ளோம்.

1982ஆம் ஆண்டு பேருவளை ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய பின்னர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொண்டு 1993ஆம் ஆண்டு அரச சேவையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டு, சிறப்பாக பணியாற்றியிருந்தார்.

1999ஆம் ஆண்டு பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை பூர்த்தி செய்ததுடன் 2009இல் திறந்த பல்கலைக் கழகத்தில் ஆசிரிய கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பூர்த்தி செய்தார். பின்னர் 2015இல் ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் நியமனம் பெற்றார்.

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலை, மட்டக்களப்பு தாழங்குடா கல்விக் கல்லூரி போன்றவற்றில் சிரேஷ்ட விரிவுரையாளராக மிகவும் மகத்துவத்துடன் பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்றிருந்தார்.

இவர் எமது அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவில் பல தடவைகள் செயலாளராகவும் இறுதியாக உப தலைவராக செயற்பட்டு வந்ததுடன் மருதமுனை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளராகவும் பல வருடங்கள் தொழிற்பட்டு, தற்போது வரை அதன் தலைவராக செயல்பட்டு மாவட்டத்துக்கும் தனது ஊருக்கும் தேசத்திற்கும் பல்வேறு சமயம், சமூகம், ஆன்மீகம் மற்றும் இன நல்லுறவு சார்ந்த சேவைகளையும் பணிகளையும் முன்னெடுத்தார்.

அஷ்ஷெய்க் அன்ஸார் மெளலானா நளீமி அவர்கள் சிறந்த எழுத்தாளராகவும், மார்க்கப் போசகராகவும், வளவாளராகவும் திகழ்ந்தார். தனக்கு வழங்கப்படும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்போடு ஈடுபடுபவராக காணப்பட்டார்.

இவர் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் தலைமையகத்தின் ஊடகக் குழுவுடன் இணைந்து சிறிது காலம் பணியாற்றி வந்தார்.

மருதமுனை நஹ்ழா அறபுக் கல்லூரியின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார். அத்துடன் அந்த அறபுக் கல்லூரியின் நிருவாக சபைச் செயலாளராக நீண்டகாலம் பதவி வகித்தார்.

அஷ்ஷெய்க் அன்ஸார் மெளலானா நளீமி அவர்கள் சமூக ஒற்றுமையைக் காப்பதிலும், இன நல்லுறவுகளைப் பேணுவதிலும் அன்பாக பழகுவதிலும், புன்னகைப்பதிலும், ஏனையவர்களை மதித்து நடப்பதிலும் தனிச் சிறப்புடையவராக காணப்பட்டார்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தினருக்கு நல்லாதரவை வழங்குவதுடன் அவரது பாவங்களை மன்னித்து, கபுறுடைய வாழ்வை விசாலப்படுத்தி ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர் சுவர்க்கத்தை வழங்குவானாக!

இவ்வாறு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா குறிப்பிட்டுள்ளது.

Aslam S.Moulana
Journalist

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *