(செல்வி வினாயகமூர்த்தி)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாகப் பீடத்தில், மாணவர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களின் கைத்தொழில் மற்றும் வியாபார முயற்சிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வியாழக்கிழமை (08) இடம்பெற்றது.
வணிக நிர்வாகப் பீடத்தின் பீடாதிபதி Mrs.ஜெலீல் சல்பியா தலைமையில், பீடாதிபதியின் அலுவலக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்சம் பவுண்டேஷன் (Zam Zam Foundation) பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பான செயற்திட்ட உத்தியோகத்தரும் நுஜா ஊடக வலையமைப்பின் தவிசாளரும் அம்பாறை மாவட்ட பெண்கள் ஒன்றியத்தின் தலைவி U.S.M.ஹஃபிசா உட்பட சமூக மட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, தொழில்முயற்சியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான திட்டம் தொடர்பான விளக்கங்களை வழங்கினர்.
இத்திட்டம், அனர்த்த மீள்திறன் தயார்நிலை நிலையம் (Disaster Resilience Preparedness Centre) மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்திப் பிரிவு (Entrepreneur Development Unit) ஆகியவற்றின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் திரு. சுஹைர் காரியப்பர் (Mr. Zuhair Kariapper) மற்றும் சிறு, நடுத்தரத் தொழில்முயற்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ். ரிபாஸ் அஹமட் (M.S. Rifas Ahamed) ஆகியோரின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்போது, மாணவர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப நிறுவன ரீதியாகத் திட்டங்களை முன்னெடுத்து, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் உதவிகளையும் வழங்குவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், தொழில்முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடும் மாணவர்களைத் தெரிவுசெய்து, அவர்களின் கைத்தொழில்கள் மற்றும் வியாபார முயற்சிகளை மேம்படுத்துவதுடன், அவற்றைச் சிறந்த முறையில் முன்னிலைப்படுத்துவதற்குத் தேவையான ஆதரவுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே தொழில்முயற்சித் திறன்களை வளர்த்து, அவர்களின் வியாபார முயற்சிகளை நிலையான தொழில்களாக மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

