-கிரிஷாந் மகாதேவன் –
கல்முனை மாநகர் நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் பராபவ வருஷ வருடாந்த உற்சவம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இவ்வுற்சவம் நற்பிட்டிமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலய பரிபாலன சபையினரின் உபயத்துடன் ஆரம்பமாகி, ஒக்டோபர் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை பாலிச்சடங்குடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.
முக்கிய உற்சவ நிகழ்வுகள்:
ஆரம்ப நாள் (11-10-2026 ஞாயிறு): முதல் நாள் திருச்சடங்கு ஆரம்பமாகி, நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயத்தில் இருந்து தெய்வீகப் பொருட்கள் பாரம்பரிய முறைப்படி ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்படும். அதனைத் தொடர்ந்து அம்மன் ஆலயத்திலிருந்து கடற்குளித்து, மீண்டும் ஸ்ரீ கணேசராலயத்திற்குச் சென்று அம்மன் பேழை எடுத்து வரப்பட்டு மாலை திருக்கதவு திறக்கப்படும்.
தினசரி திருச்சடங்குகள்: உற்சவ காலத்தில் ஆலயப் பூசைகள் யாவும் தினமும் அதிகாலை 4.00 மணிக்கும், பிற்பகல் 4.00 மணிக்கும் பக்திபூர்வமாக இடம்பெறும். அத்துடன் தினமும் பிற்பகல் வேளையில் விசேட பூசைகளைத் தொடர்ந்து அம்மன் எழுந்தருளி நற்பிட்டிமுனையின் பல்வேறு வீதிகளுக்கும் திருவுலா செல்லும் நிகழ்வுகள் இடம்பெறும்.
சக்தி பூசை (19-10-2026 திங்கட்கிழமை): 9ஆம் நாள் சக்தி பூசையன்று காலை 9.00 மணிக்கு விசேட ஹோமம், நோர்ப்பு நெல் நேர்த்தல், நோர்ப்புக் கட்டுதல் மற்றும் கடல் குளிக்கச் செல்லுதல் ஆகிய கிரியைகள் இடம்பெறும். பிற்பகல் 4.00 மணிக்கு திருச்சடங்கு நடைபெறவுள்ளது.
நிறைவு நாள் (20-10-2026 செவ்வாய்க்கிழமை): திங்கட்கிழமை பின்னிரவு (செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு) மதுக்கொடுத்தல், மடைப்பலி கொடுத்தல், ஆயுத வழிபாடு, அம்மன் பேழை ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படுதல் என்பவற்றுடன் பாலிச்சடங்கு இடம்பெற்று உற்சவம் நிறைவடையும்.
அன்றைய தினம் காலை 8.00 மணிக்கு அம்மன் ஆலய நேர்த்திப் பொருட்கள் அனைத்தும் ஆலய முன்றலில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படும். மேலும், எட்டாம் சடங்குப் பூசை எதிர்வரும் 28-10-2026 புதன்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு (செவ்வாய்க்கிழமை பின்னிரவு) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்வ பிரம்ம ஸ்ரீ சி.கோணாமலை (பொன்னுச்சாமி) அவர்களின் குரு ஆசீர்வாதத்துடன், விஷ்வ பிரம்ம ஸ்ரீ மாசிலாமணி கிருபாகர் பூசகர் அவர்களின் தலைமையில் உற்சவகாலக் கிரியைகள் யாவும் சிறப்பாக நடைபெறவுள்ளன.
அன்னை பராசக்தியின் திருவருளைப் பெற்றுய்யுமாறு அனைத்துப் பக்த அடியார்களுக்கும் ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
