நவம்பர் 03ஆம் திகதிக்கு மேலதிக விசாரணை ஒத்திவைப்பு!
கொழும்பு, ஒக்டோபர் 07:
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு வழக்கின் மேலதிக விசாரணை, 2026 நவம்பர் 03ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (07.10.2026) புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர் மாயாதுன்ன கொரியா மற்றும் மாண்புமிகு நீதியரசர் லக்மாலி கருணாநாயக்க திஸாநாயக்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகினர்.
இடையீட்டு எதிர்மனுதாரர்களாக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ. கலீல் ரஹ்மான் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் சஞ்சீவ ஜயவர்தன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகினர்.
இதனுடன் தொடர்புடைய மேலும் இரண்டு மனுக்களும், சமூக செயற்பாட்டாளர்களான முபாரிஸ் எம். ஹனீபா மற்றும் ஏ.எம். நசீர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் இன்று நீதிமன்றத்தின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
விசாரணையின்போது சம்பந்தப்பட்ட தரப்பினரின் சட்ட நிலைப்பாடுகள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான சட்ட வாதங்கள் உள்ளிட்ட விடயங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
எனினும், இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான மேலதிக சட்ட வாதங்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய மனுக்களின் விசாரணைகள் தொடர வேண்டியுள்ளதால், வழக்கின் மேலதிக விசாரணையை 2026 நவம்பர் 03ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு தொடர மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்றைய தினம் மனுதாரர்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான மேலதிக சட்ட வாதங்கள் முன்வைக்கப்படுவதுடன், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்துடன் தொடர்புடைய ஏனைய மனுக்களின் மேலதிக விசாரணைகளும் இடம்பெறவுள்ளன.
