( வி.ரி. சகாதேவராஜா,)
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யும் ‘கிழக்கின் கலைச்சங்கமம் – Eastern Art Fusion’ கலை விழா நாளை 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை அக்கரைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
முன்னொருபோதும் நடைபெறாத அளவில் ஐந்து நாட்கள் கொண்ட பல்வேறு கலை வடிவங்களை உள்ளடக்கியதான இந்த மாபெரும் கலைச்சங்கமம் எனும் பெருவிழா நடைபெற உள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமாரின் வழிகாட்டலில் சிரேஸ்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் இதற்கான செல்ல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார்.
தினமும் பிற்பகல் 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு கலை, பண்பாட்டு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
முதல் நாளான நாளை 3ஆம் திகதி தமிழ், முஸ்லிம் பாரம்பரியக் கலைக் கலாசார நிகழ்வுகள், பரதநாட்டியம், காவடி, கும்மி, கோலாட்டம், பொம்மலாட்டம், கரகாட்டம், பக்தர் கலை, சீனடி உள்ளிட்ட கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நாளை மறுநாள் 4ஆம் திகதி பட்டிமன்றம், ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவினரின் பங்குபற்றுதலுடன் இரண்டு பட்டி மன்றங்கள் நடைபெறவுள்ளன.
5ஆம் திகதி நகைச்சுவையும் மிமிக்ரி நிகழ்வும் இடம்பெறும்.
ஒக்டோபர் 6ஆம் திகதி நகைச்சுவையுடன் கூடிய கிராமிய மற்றும் நாட்டார் பாடல்கள் இடம்பெறவுள்ளதுடன், ஒக்டோபர் 7ஆம் திகதி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடல்களின் சங்கமம் மற்றும் பக்திப்பாடல்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
கிழக்கு மாகாணத்தின் பன்முக கலை மற்றும் பண்பாட்டு மரபுகளை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர் ஏ.எல்.தௌபீக் அழைப்பு விடுத்துள்ளார்.

