September 21, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > தண்டனை பெற்றோர் பரிமாற்றம், பரஸ்பர சட்ட உதவி: இலங்கை – சவூதி பேச்சுவார்த்தை

தண்டனை பெற்றோர் பரிமாற்றம், பரஸ்பர சட்ட உதவி: இலங்கை – சவூதி பேச்சுவார்த்தை

இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கிடையில் தண்டனை பெற்ற நபர்களை பரிமாறிக்கொள்வது மற்றும் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவாக இறுதி செய்வது குறித்து முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், சவூதி நீதியமைச்சின் சட்டங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மிஷால் பின் அலி அல்-பலாவியை ரியாத்தில் உள்ள நீதியமைச்சில் சந்தித்துள்ளார்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீதித்துறை மற்றும் சட்டத்துறை சார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக, தண்டனை பெற்ற நபர்களை பரிமாறிக்கொள்வது மற்றும் பரஸ்பர சட்ட உதவி தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள இரண்டு ஒப்பந்தங்களையும் விரைவாக இறுதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நீதித்துறை விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான உறுதிப்பாட்டை இருதரப்பினரும் மீண்டும் வெளிப்படுத்தியதுடன், பரஸ்பர நலன் சார்ந்த ஏனைய விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கைத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளரும் அலுவலகப் பொறுப்பாளருமான தமித்ரி சமங்கிகா மற்றும் தூதரக அதிகாரி சஜீத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பு தொடர்பான தகவலை ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் 2026 செப்டம்பர் 19ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *