(செல்வி வினாயகமூர்த்தி)
இலங்கையில் இராமகிருஷ்ண மிஷன் தனது நூற்றாண்டு கால ஆன்மிக, கல்வி மற்றும் சமூக சேவைப் பயணத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அதன் நூற்றாண்டு பயணத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் கிரகசாந்தி பிரார்த்தனை, சிறப்பு யாக பூஜை மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில், அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, சமூக ஒழுக்கத்தை மேம்படுத்துவதுடன் மாணவர்களிடையே அறநெறிக் கல்வி மற்றும் ஆன்மிக சிந்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் இடம்பெற்றது.
சுவாமி நீலமாதவானந்தர் மகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இந்தியாவிலுள்ள இராமகிருஷ்ண மடத்திலிருந்து வருகை தந்த சுவாமி சுதயானந்தர் மகராஜ், சுவாமி உமாதீஷானந்தர் மகராஜ் மற்றும் சுவாமி பிரம்மண்யானந்தர் மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலை வேளையில் மக்களின் நல்வாழ்வு, நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலக நலனை வேண்டி கிரகசாந்தி சிறப்பு பிரார்த்தனை இடம்பெற்றதுடன், தொடர்ந்து சிறப்பு யாக பூஜையும் நடைபெற்றது.
அத்துடன் சுவாமி சுதயானந்தர் மகராஜ் அறநெறி மாணவர்களுக்கு சிறப்பு ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தினார். மாணவர்கள் நல்லொழுக்கம், அறநெறி, மனிதநேயம் மற்றும் ஆன்மிகப் பண்புகளை வளர்த்துக்கொண்டு சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக உருவாக வேண்டியதன் அவசியம் தொடர்பில் அவர் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டதுடன், சுவாமிமார்களினால் பக்தர்களுக்கு ஆன்மிக ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.
மேலும், 1995ஆம் ஆண்டு உயர்தரம் கற்ற பழைய மாணவர்களினால் அறநெறி ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையும் வழங்கப்பட்டது.
இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு பயணத்தை நினைவுகூரும் வகையிலும், மாணவர்களிடையே அறநெறி, ஒழுக்கம் மற்றும் ஆன்மிக விழுமியங்களை வளர்க்கும் வகையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் பக்தர்கள், அறநெறி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.





