நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தேசிய டெங்கு ஒழிப்பு செயலகத்தின் அனுசரணையுடன், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், கல்முனை மாநகர சபை மற்றும் முப்படையினரின் பங்களிப்புடன் நாளை (14.09.2026) முதல் 19.09.2026 வரை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பே. கேதுஜன், கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.
இதற்கமைய, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் பின்வரும் அட்டவணைப்படி இடம்பெறவுள்ளன:
- 14 – 15.09.2026: கல்முனை
- 16 – 17.09.2026: பாண்டிருப்பு
- 18 – 19.09.2026: பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு
குறித்த தினங்களில் அனைத்து பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், பொதுமக்கள் தங்களது வீடுகள், வியாபார நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் அலுவலகங்களில் தேங்கி நிற்கக்கூடிய நீர் மற்றும் நுளம்புகள் பெருகக்கூடிய பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றி, அவற்றை சேகரிக்க வசதியாக பொதியிட்டு வைக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தேசிய மற்றும் பிரதேச மட்டங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், டெங்கு நோயின் அபாயத்தை பொதுமக்கள் உணர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதுடன், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் காலப்பகுதியில் மழை பெய்யக்கூடிய சூழ்நிலை காணப்படுவதால், நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பா. கேதுஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.