(வி.ரி.சகாதேவராஜா -செல்வி வினாயகமூர்த்தி)
இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 08.09.2026 நாளை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நிறைவடையவுள்ளது.
மகாபாரத இதிகாச வரலாற்றை அடிப்படையாக்க்கொண்டு சடங்குகள் நடைபெறும் இவ்வாலய திருவிழாக்கள் 18 நாட்கள் நடைபெறும். இலங்கையின் மிக நீண்ட தீக்குழி இவ்வாலயத்திலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
10ஆம் திகதி மாலை வியாழக்கிழமை மகாபாரதம் ஏடு திறத்தலும் மகாபாரத பாராயணம் இடம்பெறவுள்ளதுடன், 14ஆம் திகதி திங்கட்கிழமை இரவு சுவாமி எழுந்தருளல் பண்ணலும்( ஸ்ரீ கிருஷ்ண பகவான் துவாரகாபுரியில் இருந்து அஸ்தினாபுரத்துக்கு வருகை தரல்) நடைபெறவுள்ளன.
15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை நாட்கால் வெட்டுதல் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து செப்டெம்பர் 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை கல்யாணக்கால் வெட்டுதலும் ஊர்வலமும் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறும்.
23ஆம் திகதி புதன்கிழமை பகல் வாள் மாற்றுதல் பரந்தமான் ஸ்ரீ திரௌபதி தேவி சகிதம் வனவாசம் செல்லலும் அதனைத்தொடர்ந்து அஞ்ஞாதவாசம் பஞ்சபாண்டவர் செல்லுதல் உள்ளிட்ட முக்கிய சடங்குகளும், 24ஆம் திகதி வியாழக்கிழமை பின்னிரவு அருச்சனன் பாசுபதம் பெற தவம் செய்தலும். அரவானை களம்பலியிடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
25ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை வீர கும்பம் நிறுத்தி தீ மூட்டுதல் பிற்பகல் கடல் நீராடி மஞ்சள் குளித்து தீ மிதித்தல் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.
26ஆம் திகதி சனிக்கிழமை பகல் தர்மருக்கு முடி சூட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து தீ குழிக்கு பாற்பள்ளைய நிகழ்வும் அதனை தொடர்ந்து இரவு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அம்பாள் ஊர்வலத்துடன் எழுந்தருளல் ஆகிய முக்கிய உற்சவ நிகழ்வுகளுடன் வருடாந்த உற்சவம் நிறைவடையவுள்ளது.
உற்சவ காலத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ திரௌபதை அம்மனின் திருவருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர. உற்சவத்தின் இறுதி நான்கு நாட்கள் விஷேட போக்கு வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கி.பி 1540 ஆண்டினை மையப்படுத்தி இவ்வாலயம் 1584 இல் கட்டப்பட்டது எனலாம். 5ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வட இந்தியாவின் கொங்கு நகரில் இருந்து வைணவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் தாதன் எனும் முனி இலங்கைக்கு வந்தார். இவர் மகாபாரத இதிகாசத்தை மக்கள் மத்தியில் முக்கியப்படுத்தி அதன் நிகழ்வுகளை சடங்காக நடித்துக்காட்டி வந்தார்.ஜ1ஸ. இவர் மட்டக்களப்பின் தென்கோடியில் இருந்த நாகர்முனைக் கோவிலில் தங்கியிருந்து சமயபோதனை செய்வதை அறிந்துகொண்ட அந்நாளைய மட்டக்களப்புக்கான திக்கதிபரான எதிர்மன்னசிங்கன் (கி.பி 1539 – கி.பி-1583) ஜ2ஸஅவரைச் சந்தித்து விபரமறிந்து வரவேற்றான். தாதனின் வேண்டுகோளின்படி பாண்டிருப்புக் கிராமத்தின் ஆலவிருட்சங்களும் கொக்கட்டி மரங்களும் நிறைந்த இடத்தை விஷ்ணு பாண்டவர்களுக்கு ஆலயம் அமைக்க வழிசெய்தான் என வரலாறு கூறுகிறது
