November 17, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பொத்துவில் காணி சுவீகரிப்பு வர்த்தமானியை உடனடியாக வெளியிடாவிடின் நீதிமன்றம் செல்வோம்; பாராளுமன்றத்தில் நிஸாம் காரியப்பர் எச்சரிக்கை.!

பொத்துவில் காணி சுவீகரிப்பு வர்த்தமானியை உடனடியாக வெளியிடாவிடின் நீதிமன்றம் செல்வோம்; பாராளுமன்றத்தில் நிஸாம் காரியப்பர் எச்சரிக்கை.!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

பொத்துவில் பிரதேசத்திலுள்ள மக்களின் பூர்வீகக் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளை வனப்பகுதிகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 2492/16 இலக்க வர்த்தமானி அறிவித்தலை உடனடியாகப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும் எனவும், தவறினால் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நிஸாம் காரியப்பர் பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் கணிசமான காணிகள் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள போதிலும், குறித்த வர்த்தமானி அறிவித்தலை இணையத்தளத்திலோ, வனப் பாதுகாப்புத் திணைக்களத்திலோ அல்லது அம்பாறை மாவட்டச் செயலகத்திலோ பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்ற அச்சத்தில் இவ்வர்த்தமானி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஆத்திமுனை மற்றும் செங்காமம் ஆகிய பகுதிகளில் மக்கள் நீண்டகாலமாக வசித்து வரும் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அடங்கலாகப் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் ‘லாஹுகல – செங்காமம் வனப்பகுதியின்’ கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவ்விரு கிராமங்களும் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்டவை என்பதால், அவற்றை லாஹுகல வனப்பகுதியுடன் இணைப்பது புவியியல் மற்றும் நிர்வாக ரீதியாகத் தவறான செயல் என அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை முன்வைத்த யோசனைக்கு அமைவாக, மக்கள் குடியிருக்கும் எந்தவொரு காணியும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட மாட்டாது எனக் குழுவின் தலைவரான பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோர் தெளிவான வாக்குறுதி வழங்கியிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

எனினும், தற்போது வர்த்தமானி வெளியிடப்படாமை மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இவ்விடயம் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் அறிவுறுத்தலின் பேரில் இடம்பெறுகிறதா அல்லது அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடா என்பது குறித்து அரசாங்கம் உடனடியாகத் தெளிவுபடுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் எனவும் நிஸாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *