November 5, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை மாநகர சபையின் 2027 பட்ஜெட்: சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்.!

கல்முனை மாநகர சபையின் 2027 பட்ஜெட்: சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை பொதுமக்களின் பங்கேற்புடன் தயாரிப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாக, சிவில் சமூக பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில், மாநகர சபை கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன் அவர்களின் நெறிப்படுத்தலில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் கல்முனை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். அப்துல் மஜீட், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம். பளீல் உட்பட பள்ளிவாசல்கள், கோவில்கள் மற்றும் ஆலயங்களின் நிர்வாகிகள், வர்த்தகர் சங்கங்கள் மற்றும் பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பொதுமக்களின் நலன் சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் விரிவான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன.

கலந்துரையாடலில் பங்கேற்றவர்களை விடயப் பரப்புகளின் அடிப்படையில் ஆறு குழுக்களாகப் பிரித்து கலந்தாய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள், மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் உள்வாங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்டன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *