( காரைதீவு நிருபர் சகா)
கடந்த மூன்று தினங்களாக சுகயீனமுற்று அசையாமல் படுக்கையில் கிடந்த காட்டு யானை ஒன்று மடத்தடி மீனாட்சி அம்மனின் மந்திரிக்கப்பட்ட தீர்த்தம் பட்டதும் அசைந்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.
சம்மாந்துறை பகுதியிலுள்ள வயல் பகுதியில் கடந்த புதன்கிழமை (21) முதல் 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று சுகயீனமற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.
அந்த யானையை, மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய தலைவர் கே.ஜெயசிறில், கொட்டும் மழைக்கு மத்தியில் நேற்று சென்று அம்மனின் தீர்த்தத்தை பத்திரக்கொத்தால்தெளித்து மலர்மாலையையும் அணிவித்தார்.
மறுகணம் அது காலையும் தும்பிக்கையையும் அசைத்தது. அது பார்த்திருந்தோர் அனைவரையும் பரவசத்துக்குள்ளாக்கியது.
வயல் பகுதியில் உயிருக்குப் போராடி வரும் குறித்த காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக வனஜீவராசிகள் மருத்துவப் பிரிவினரால் தீவிர மருத்துவச் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வயல்வெளியின் சேற்றுப் பகுதியில் சுகயீனத்தால் எழ முடியாமல் வீழ்ந்து கிடக்கும் இந்த யானையின் உயிரைக் காத்து, அதனை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக வனஜீவராசிகள் மருத்துவக் குழுவினர் நேற்று முன்தினம் (22) முதல் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
