October 12, 2026

Blog Post

Kalmunai Net > Uncategorized > அனோஜன் விவகாரம் – சவூதி அரேபியா சென்ற சட்டத்தரணிகள் குழு -இன்று நாடு திரும்புவதில் தாமதம்

அனோஜன் விவகாரம் – சவூதி அரேபியா சென்ற சட்டத்தரணிகள் குழு -இன்று நாடு திரும்புவதில் தாமதம்

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாமதம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் தண்டனைக்கு எதிராக, ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 11) சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டத்தரணிகள் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த மேன்முறையீடு தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாடின் ஒருங்கிணைப்புடன், இரு நாடுகளையும் சேர்ந்த சட்டத்தரணிகள் பலகட்ட ஆலோசனைகளை நடத்திய பின்னர் மேன்முறையீடு தயாரிக்கப்பட்டது. ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக சட்ட நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

முகநபி முஹம்மது நபியை அவமதிப்பதாகக் கருதப்பட்ட சமூக ஊடகப் பதிவொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் அனோஜனுக்கு சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. முன்னதாக, கீழ் நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்த நிலையில், மேன்முறையீட்டின் பின்னர் அந்தத் தீர்ப்பு மாற்றப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, மேன்முறையீட்டைத் தயாரிப்பதற்கு உதவுவதற்காக இலங்கையிலிருந்து விசேட சட்டத்தரணிகள் குழுவொன்று சவூதி அரேபியாவுக்குச் சென்றது.

இந்தக் குழுவில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அசார்ட் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாட், ஜெத்தாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் நீதிபதி மொஹமட் லாபிர் மற்றும் சில்மி ரியாஸ்தீன் ஆகியோரும் இந்தச் சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் பங்களித்துள்ளனர்.

இதற்கிடையில், இலங்கை சட்டத்தரணிகள் குழு ரியாத்தில் சிக்கியுள்ளது. சவூதி தலைநகரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக, அவர்கள் இலங்கைக்குத் திரும்புவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த விமானப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.

சவூதி அரேபியாவின் உயரிய நீதித்துறை அதிகார அமைப்பான உச்ச நீதிமன்றம், கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளைச் சட்ட மற்றும் நடைமுறை அடிப்படையில் மீளாய்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

-Newswire

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *