செல்வி வினாயகமூர்த்தி) – கிரிஷாந் மகாதேவன் –
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்த விசேட நிகழ்வொன்று அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற முன்றலில் இன்று (23) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட ஆலயங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அனோஜனின் விடுதலைக்காக ஒருமித்த குரல் எழுப்பினர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதிநிதிகள், மனிதாபிமான அடிப்படையில் அனோஜனை விடுதலை செய்யக் கோருவது அனைத்து மதங்களும் போதிக்கும் உன்னத சிந்தனை எனச் சுட்டிக்காட்டினர். மேலும், அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவரது விடுதலைக்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்த அதிமேதகு ஜனாதிபதிக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்ததோடு, வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், நபிகள் நாயகத்தின் போதனைகளின்படி பிற மதத்தினரையும் நேசித்து, மனிதாபிமான அடிப்படையில் சவூதி அரேபிய மன்னர் இந்த விவகாரத்தில் நல்லதொரு தீர்வினை வழங்கி அனோஜனின் உயிரைக் காக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அனோஜனின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வரும் முஸ்லிம் உலமாக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆயிரக்கணக்கான கையொப்பங்களைத் திரட்டி உயர் மட்டத் தலைவர்களைச் சந்திக்க அயராது உழைத்த தன்னார்வலர்களின் முயற்சிகளுக்கும் இந்நிகழ்வில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், நல்லிணக்கத்தை வலுப்படுத்தி அனோஜனை மீட்டெடுக்க அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.





