September 22, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் ;மாணவர் பாராளுமன்றம்

துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் ;மாணவர் பாராளுமன்றம்

செல்லையா பேரின்பராசா

ஜனனாயகப் பண்புகளை மாணவர் மனங்களில் விதைப்பதற்காகவும், தலைமைத்துவப் பண்புகளை மாணவர்களிடம் வளர்ப்பதற்காகவும் பாடசாலைகளில் மாணவர் பாராளுமன்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன இதன் மூலமாக இன்றைய சிறார்களை நாளைய தலைவர்களாக சிறந்த முறையில் உருவாக்க முடியும்.

இவ்வாறு பட்டிருப்பு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.ரகுகரன் குறிப்பிட்டார்.

பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றம் இப் பாடசாலை அதிபர் சா.கிருபைராசாவின் வழிகாட்டலிலும் பிரதி அதிபர் இ.லிங்கநாதனின் தலைமையிலும் (22.09.2026) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்து சிறப்பித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே. ரகுகரன் அங்கு மேலும் பேசுகையில்.

பாடசாலை மாணவர் பாராளுமன்றம் எதிர்க் கட்சி இன்றி ஆளும் கட்சியுடன் இயங்குவதன் நோக்கம் மாணவர்களிடையே முரண்பாடு ரீதியான கருத்துக்களை தவிர்த்து ஒற்றுமையுடன் தொழிற்படும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டமையாகும்.

இந்த மாணவர் பாராளுமன்ற அமர்வில் எடுக்கப்படும் தீர்மானங்களை ஒவ்வொரு குழுக்களும் சிறப்பாக பாடசாலை மட்டத்தில் அமுல்படுத்தும் போது பாடசாலைகளின் தேவைகளை படிப்படியாக நிறைவேற்ற முடியும். குறிப்பாக சுகாதாரப் பிரச்சினைகள் வகுப்பறைத் தேவைகள் பாடசாலை சுற்றுப்புத்தை வனப்பு மிக்கதாக மாற்றுதல் என பல விடயங்களை முன்னெடுக்கும் போது அது சமூகத்தில் பெரும் வரவேற்பை பெற வாய்ப்புண்டு என்றார்.

இந் நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் செல்லையா பேரின்பராசா சிறப்புரையாற்றினார். ஆசிரிய ஆலோசகர்களான ஆ.மதியழகன், து.அச்சுதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *