September 22, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அனோஜனின் மரண தண்டனை விவகாரம்; நாடாளுமன்றில் அடுத்த நகர்வு தொடர்பில் விபரித்த அமைச்சர்

அனோஜனின் மரண தண்டனை விவகாரம்; நாடாளுமன்றில் அடுத்த நகர்வு தொடர்பில் விபரித்த அமைச்சர்

அனோஜனுக்கு மரண தண்டனை – நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அனோஜனின் சார்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்ட பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அனோஜனை சவூதி அரேபியாவின் இணையக் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்குப் பதிலாக, ஷரீஆ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்குமாறு சவூதி அரசுத் தரப்பு சட்டத்தரணி மேன்முறையீடு செய்திருந்ததாகவும், அதன் பின்னணியிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அனோஜனின் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ராஜதந்திர ரீதியிலான தலையீடுகளை மேற்கொண்டு வருவதுடன், இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்ட நிபுணர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சவூதி மன்னருக்கு அனுப்பவுள்ள கடிதத்தை கையளிப்பதற்காக, பிரதி சபாநாயகர் தலைமையிலான விசேட குழுவொன்றை சவூதி அரேபியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் போது சவூதி வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து, அனோஜனின் மரண தண்டனையை இரத்து செய்யவோ அல்லது தண்டனையை குறைக்கவோ கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

அனோஜனின் சார்பில் சவூதி அரேபியாவில் ஏற்படும் அனைத்து சட்டச் செலவுகளையும் இலங்கை அரசாங்கம் ஏற்கும் என்றும், இதுவரை அவரது குடும்பத்தினரால் செலுத்தப்பட்ட சட்டச் செலவுகளையும் அரசாங்கம் மீள வழங்கும் என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *