சவுதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலை வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மதநிந்தனை குற்றச்சாட்டின் கீழ் சவுதி அரேபிய நீதிமன்றத்தால் கடந்த மாத தொடக்கத்தில் அனோஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த நிலையில், தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அனோஜனின் விடுதலைக்காக சவுதி அரேபிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கும் நடவடிக்கைகளை, தமிழ்பேசும் மக்களின் பேரவை முன்னெடுத்து வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட சுமந்திரன், அனோஜனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில், இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தின் உயர்மட்ட அதிகாரிகளை உடனடியாகச் சந்திப்பதற்கு நேரம் கோர உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், அனோஜனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் ஊடாகவே தகவல்கள் வெளியாகியுள்ளதால், அந்தத் தீர்ப்பு தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக உத்தியோகபூர்வ விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அனோஜன் தனது சமூக ஊடகப் பதிவை சில நிமிடங்களிலேயே நீக்கி, பின்னர் காணொளி மூலம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியதாக வெளியாகியுள்ள தகவல்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“ஒரு மனிதன் செய்த தவறுக்காக மனம் திருந்தி தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது” எனக் குறிப்பிட்ட அவர், இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாஹ்வின் அளப்பரிய கருணை மீது தாம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒருவரின் நம்பிக்கை மற்றும் உண்மையான மனமாற்றம் தொடர்பான இறுதித் தீர்ப்பு எல்லாம் வல்ல இறைவனுக்கே உரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அனோஜனுக்கு கருணை காட்டி பொதுமன்னிப்பு வழங்குமாறு சவுதி அரேபிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள சுமந்திரன், அவருக்கு தேவையான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதுடன், உடனடி இராஜதந்திர தலையீடுகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“நீதியில் கருணைக்கும் இடமிருக்க வேண்டும். அனோஜன் தனது குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று, தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பைப் பெறுவதற்கு தகுதியானவர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.