September 20, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கண்ணகிகிராமத்தில் சிரமதானம்.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கண்ணகிகிராமத்தில் சிரமதானம்.

(செல்வி வினாயகமூர்த்தி)

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,இதன் இரண்டாம் கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமம் 1ல் “அத்தம்” வேலைத்திட்டத்தின் கீழ் மாபெரும் சிரமதானப் பணி (19) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
கண்ணகிகிராமம் 1 பகுதியில் அமைந்துள்ள ஆலமரத்தடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலை வளாகத்தின் வெளிப்புறச் சூழல், சனசமூக நிலையம், தபாலகம், பாலர் பாடசாலை, சுகாதார நிலையம்,தொழில்பயிற்ச்சி நிலையம் உள்ளிட்ட வெளிப்புறப் பகுதிகள் அனைத்தும் இதன்போது சுத்தம் செய்யப்பட்டன.

இத்தூய்மைப் பணியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் சார்பில் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் மற்றும் சமூக அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து கொண்டனர்.

இதன்போது கண்ணகிகிராமம் 1 மற்றும் 2 பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, குறித்த பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தினர்.

தூய்மையானதும் அழகானதுமான சூழலை உருவாக்குதல், பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் இச்சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *