September 18, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > எனது மகனை உயிரோடு மீட்டுத் தாருங்கள்! கதறிஅழுது அனோஜனின் தாயார் மன்றாட்டம்! இது ஓர் உயிருக்கான போராட்டம் என்கிறார் கோடீஸ்வரன் எம்பி.!!

எனது மகனை உயிரோடு மீட்டுத் தாருங்கள்! கதறிஅழுது அனோஜனின் தாயார் மன்றாட்டம்! இது ஓர் உயிருக்கான போராட்டம் என்கிறார் கோடீஸ்வரன் எம்பி.!!

எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள் என்று அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 இவ்வாறு சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும்  அனோஜனின் தாயார் கதறிஅழுது மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்தார் .

கல்முனையையடுத்துள்ள நற்பிட்டிமுனையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (18) வெள்ளிக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கதறி அழுதார்.

அவர் மேலும் கூறுகையில் :

அவர் செய்தது தவறுதான் .அதற்காக அவரும் ஏலவே மன்னிப்பு கேட்டிருந்தார். நாங்களும் மன்னிப்பு கேட்கின்றோம். ஜம்மியத்துல் உலமாசபை,இலங்கை அரசாங்கம், சவுதி அரசாங்கம், முஸ்லிம் தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயவு கூர்ந்து  மீண்டும் ஒருமுறை மன்னித்து எனது மகனை உயிரோடு மீட்டு தாருங்கள். இல்லாவிட்டால் நாங்கள் மூவரும் மரணிப்போம் என்று கதறியழுது கூறினார் .

அனோஜனின் சகோதரர் கூறுகையில் :

எமது குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவர் அவர்தான். அவரது உழைப்பில் தான் நாம் வாழ்க்கையை ஓட்டுகின்றோம்.அவருக்கு இந்த கெதி என்றால் நாங்கள் நிர்க்கதியாகவோம். 

 செய்த தவறுக்கு மிகவும் பெரிய தண்டனையாக இதை நினைக்கிறோம்.  தயவு கூர்ந்து அவர் செய்த தவறை மன்னித்து  அனைவரும் இந்த விடயத்தில் ஒத்துழைத்து அவரை விடுவித்து தாருங்கள் என்றார்.

ஜனாதிபதி பிரதமர் வெளிநாட்டு அமைச்சகம் என்பவற்றோடு கடந்த காலத்தில் இடம்பெற்ற தொடர்புகள் பற்றிய ஆவணங்கள் காண்பிக்க பட்டன.

அங்கு சமூகமளித்திருந்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கூறுகையில்:

 இது மிகவும் நெகிழ்ச்சியான வேதனைக்குரிய தருணமாக படுகின்றது . இது ஓர் உயிருக்கான போராட்டம்.

இதனையிட்டு நாங்கள் ஏற்கனவே எமது சக முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு அமைச்சர் என்று  பலருடனும் பேசி இருக்கின்றோம் அவர்களும் இணைந்து செயற்படுவதாக கூறியுள்ளனர்.

இந்த வேளையில் தேவையற்ற முகநூல் பதிவுகளை , கூட்டங்களை போராட்டங்களை தவிர்த்து மனிதாபிமானத்திற்கு வழிவிடுங்கள்.

தமிழ் முஸ்லிம் மக்கள் அமைப்புக்கள் இணைந்து இந்த விடயத்திலே  கோரிக்கை விடுத்து அனோஜனை  உயிரோடு மீட்டெடுக்க வேண்டும் .இதற்காக எங்களது  உச்சகட்ட ஆதரவை தருவோம்.  என்றார்.

அவ்வமயம் ,நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இ.ரூபசாந்தன் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் ஆலய தலைவர்கள் பலரும்கலந்து கொண்டார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *