September 18, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்: வீடுகள், வெற்றிடங்கள் தீவிர பரிசோதனை!

விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்: வீடுகள், வெற்றிடங்கள் தீவிர பரிசோதனை!

பொதுமக்கள் தமது சூழலைத் தூய்மையாக வைத்திருக்க சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள்

பாறுக் ஷிஹான்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ், கல்முனை மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் இன்று (18) தீவிர ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் நெறிப்படுத்தலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸஹ்ரா சாரப்தீனின் வழிகாட்டலில், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச். ரிஸ்பின் தலைமையில் இச் சிறப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

இந்நடவடிக்கையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI), பொலிஸார், முப்படையினர் மற்றும் டெங்கு கள உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் நேரில் களமிறங்கினர்.

இதன்போது, அப்பகுதியிலுள்ள வீடுகள், அதனைச் சூழ்ந்துள்ள சுற்றுப்புறச் சூழல்கள் மற்றும் கைவிடப்பட்ட வெற்றிடங்கள் என்பன தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டன. அத்துடன், பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டன.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய சுகாதாரப் பிரிவினர், பொதுமக்கள் தமது வீடுகளிலும் வளாகங்களிலும் நீர் தேங்கி நிற்பதைத் தடுத்து நுளம்பு பெருகாதவாறு தூய்மையாகப் பேணுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *