September 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை வடக்கில் முதன்முறையாக “வெற்றிக்கு அப்பால்” தலைமைத்துவப் பயிற்சி; 50 இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கல்!

கல்முனை வடக்கில் முதன்முறையாக “வெற்றிக்கு அப்பால்” தலைமைத்துவப் பயிற்சி; 50 இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கல்!


அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் EQUIP / Maxwell Leadership அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த “வெற்றிக்கு அப்பால் – Beyond Success Roundtable Initiative” எனும் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

இப்பயிற்சியை நிறைவு செய்த 50 இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (01.09.2026) நடைபெற்றது.

இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவ ஆற்றல்களை மேம்படுத்துதல், அவர்களின் சிந்தனை முறை மற்றும் தலைமைத்துவ மனப்பான்மையை வளர்த்தல், தனிப்பட்ட மற்றும் சமூக வளர்ச்சிக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் இப்பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பயிற்சித் திட்டத்தின் கீழ் மனப்பான்மை (Mindset), தனிப்பட்ட வளர்ச்சி (Personal Growth), முன்னுரிமை (Priority), உறவுகள் (Relationships), எனது அதிமுக்கிய உறவு (My Most Important Relationship), நல்ல நோக்கத்திலிருந்து நல்ல செயல்பாடுகள் (Good Intentions to Good Actions), வெற்றியிலிருந்து சிறப்புமிக்க வாழ்வை நோக்கி (From Success to a Life of Significance) உள்ளிட்ட பல்வேறு தலைமைத்துவ மற்றும் தனிமனித மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதன் மூலம் பயிலுனர்கள் தலைமைத்துவத் திறன்கள், பொறுப்புணர்வு, சிந்தனை முறை, உறவுகளை திறம்பட கையாளும் திறன் மற்றும் சமூகத்திற்கும் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களைப் பெற்றனர்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எம். ஜீவராஜ், திட்டமிடல் பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் வே. அரவிந்தன், வளவாளர் திருமதி. சோனியா தயாகரன் மற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ. சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டு பயிலுனர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவ ஆற்றல்களை வளர்த்து, எதிர்காலத்தில் சமூகத்தையும் நிறுவனங்களையும் பொறுப்புடன் வழிநடத்தக்கூடிய தலைவர்களாக அவர்களை உருவாக்குவதற்கான முக்கியமான முன்னெடுப்பாக இத்திட்டம் அமைந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *