November 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > வாதத்திறமையால் காலிறுதிக்கு முன்னேறிய வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயம் – நாவிதன்வெளி தவிசாளர் ரூபசாந்தன் வாழ்த்து 

வாதத்திறமையால் காலிறுதிக்கு முன்னேறிய வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயம் – நாவிதன்வெளி தவிசாளர் ரூபசாந்தன் வாழ்த்து 

( வி.ரி. சகாதேவராஜா)

சக்தி தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் “சொல்லால் வெல்வோம்… வெல்லும் வரை சொல்வோம்!” எனும் மாபெரும் விவாதப் போட்டியில், சம்மாந்துறை வலய நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட வேப்பையடி  கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் தமது அபாரமான விவாதத் திறமையால் காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த,  குறித்த பாடசாலை அமைந்துள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், “இந்தச் சாதனை எமக்குப் பெருமை மட்டுமல்ல, எமது இளைய தலைமுறையின் ஆற்றலுக்கும், எதிர்கால நம்பிக்கைக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகும். காலிறுதியைத் தாண்டி அரையிறுதி, அதையும் தாண்டி இறுதிப் போட்டியில் வெற்றிக் கிண்ணம் எமது மண்ணை வந்தடைய வேண்டும்” என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

முதல் இரண்டு சுற்றுக்களிலும் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்த இம்மாணவர்கள், இவ்வாரப் போட்டியில் “ஈழத்துச் சினிமாவை வளர்ப்பதற்குத் தென்னிந்திய சினிமாவைக் கட்டுப்படுத்துவது அவசியம்” எனும் மசோதாவை முன்வைத்து, ஆழமான கருத்துக்களுடனும், ஆணித்தரமான வாதப்பிரதிவாதங்களுடனும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் நாவிதன்வெளி போன்ற பின்தங்கிய கடைக்கோடிக் கிராமத்தில் இருந்து தேசிய மட்டத்தில் தமது அறிவாற்றலையும், பேச்சாற்றலையும் வெளிப்படுத்தி, தமது பாடசாலையையும், பிரதேசத்தையும் நாட்டின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

இந்த வெற்றிக்கு பாடசாலை அதிபர் க. தியாகராஜா அவர்களின் வழிகாட்டலில், தமிழ் பாட ஆசிரியர்களான ஆர். தவகுமார், திருமதி ரீ. நிஜேந்திரன், திருமதி கே. கார்த்திக் ஆகியோரின் ஒத்துழைப்புடனும், ஆசிரியர் பி.சி. சசேந்திரா அவர்களின் சிறப்பான பயிற்றுவிப்புடனும் இந்த வெற்றிப் பயணம் சாத்தியமாகியுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களான கோவர்தனா, சலுஜா, சிரட்ஷியா, சலுக்சா, வர்ணிகா, ஹேஸ்ணவித் ஆகியோருக்கு பாடசாலைச் சமூகம், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *