(செல்வி வினாயகமூர்த்தி, )
அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா இன்று (11) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, ஆலயத்தில் பல்வேறு சமயக் கிரியைகள், விசேட அபிஷேக அலங்காரப் பூசைகள், ஆராதனைகள் மற்றும் அம்மனின் வீதியுலா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை சித்த யோகமும் சித்திரை நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் கணபதி ஹோமத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ளது. அன்றிரவு 7.21 மணிக்கு அம்மனின் திருக்கதவு திறக்கப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.
தொடர்ந்து, ஒக்டோபர் 12, 13ஆம் திகதிகளில் அபிஷேக அலங்காரப் பூசைகளும் ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. 14ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு மாவிளக்குப் பூசை இடம்பெறுவதுடன், அம்மனின் வெளிவீதி வலமும் நடைபெறும். 15ஆம் திகதி அபிஷேக அலங்காரப் பூசைகளுடன் அம்மனின் வெளிவீதி உலா இடம்பெறவுள்ளது.
16ஆம் திகதி காலை பாற்குட பவனியும், இரவு மக்கள் முற்போக்கு அபிவிருத்தி சங்கத்தினரின் அபிசேக அலங்காரங்களுடன் பூசைகளும் வெளிவீதி வலமும் நடைபெறவுள்ளன. 17ஆம் திகதி காலைப் பூசையைத் தொடர்ந்து அலங்காரத் தேர்ததனில் அம்மன் எழுந்தருளி, பிரதான வீதியூடாக தேரோட்டம் இடம்பெறும் . அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் வெளிவீதி உலாவும் இடம்பெறும்.
18ஆம் திகதி பழைய ஆலயத்திலிருந்து வீரகம்பம் வெட்டுதலும் மாலை வாழைக்காய் எழுந்தருளப்பண்ணலும் இடம்பெறும். அபிஷேக அலங்கார பூசைகளுடன் வாச்சிக்குடா பகுதியில் அம்மன் சிம்ம வாகன ரதபவனி ஊர்வலமாக வலம் வருதல் இடம்பெறும். 19ஆம் திகதி மாலை அம்மனுக்கு அபிஷேக அலங்காரப் பூசைகளுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் பிரதான வீதியூடாக வீதியுலா வரவுள்ளார்.
20ஆம் திகதி காலை 10 மணிக்கு கும்பம் சொரிதலும் தொடர்ந்து மருதயடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து நோர்ப்பு நெல் எடுத்தலும் தொடர்ந்து சக்தி மகா யாகமும் ,நோர்ப்பு கட்டுதலும் சமுத்திரக் கரைக்குச் சென்று கடற்குளிப்பும் இடம்பெற்று இரவு அம்மனுக்கு விசேட பூசைகளும் நடைபெறவுள்ளன.
திருவிழாவின் இறுதி நாளான 21ஆம் திகதி புதன்கிழமை காலை மஞ்சள் குளிப்பைத் தொடர்ந்து தீ மிதிப்பு வைபவமும் ஆயுத பூஜைக்கான விசேட கிரியைகளும் பூசைகளும் இடம்பெற்று வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா நிறைவுபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, எட்டாம் சடங்கு வைபவம் ஒக்டோபர் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு ஆரம்பமாகி, 28ஆம் திகதி புதன்கிழமை காலை தீக்குளிக்கு பால் வார்த்தலும், பொங்கல் பூசைகளும் இடம்பெற்று நிறைவுபெறவுள்ளது.
இவ்வுற்சவக் கிரியைகள் ஆலய உற்சவப் பிரதம குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ த. தினேஷ்காந்தன் ஐயா, உற்சவ கால குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ செ. நிறேகன் ஐயா, நித்திய குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ வே. மேகராஜா ஐயா மற்றும் உதவி குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ நா. கேதீஸ்வரன் ஐயா ஆகியோரால் நடாத்தி வைக்கப்படவுள்ளன.
இவ்வருடாந்த திருச்சடங்குப் பெருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
