(செல்வி வினாயகமூர்த்தி)
அம்பாறை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் வலியுறுத்தியுள்ளது.
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்புக்கும் அமைச்சருக்கும் இடையிலான இச்சந்திப்பு நேற்று (28) பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அம்பாறை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மூவின சமூகங்களும் வாழும் அம்பாறை மாவட்டத்தில் கடந்த 12 வருடங்களாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, உரிமைகள், பெண்களின் வாழ்வாதாரம், காணி தொடர்பான பிணக்குகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சமூக மட்டத்தில் செயற்பட்டு வரும் பெண்கள் வலையமைப்பு, பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அவர்களுக்கான வலுப்படுத்தும் குரலாகவும் செயற்பட்டு வருகின்றது.
இதன்போது, அம்பாறை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட ரீதியாக சேகரிக்கப்பட்ட தரவுகள், கள நிலவரங்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களின் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
குறிப்பாக, சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், குடும்பத்திற்குள் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் பாவனையின் தாக்கம், சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தின் ஊடாக சிறுவர்கள் எதிர்நோக்கும் ஆபத்துகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
மேலும், சிறுவர்களுக்கு வயதுக்கேற்ற பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வை வழங்குதல், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார வலுவூட்டலை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் பிராந்திய ரீதியான சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை ஏற்படுத்துதல், பெண்களின் பொருளாதார வலுவூட்டலை உறுதிப்படுத்தும் திட்டங்களை விரிவுபடுத்துதல், பெண்களுக்கான வாழ்வாதார மற்றும் தொழிற்பயிற்சி மையங்களை உருவாக்குதல் ஆகியவை தொடர்பிலும் பெண்கள் வலையமைப்பினால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் சட்டப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், புலம்பெயர்ந்த தொழிலாளர் தாய்மார்களின் பிள்ளைகளுக்கான சட்டப் பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் தொடர்பிலும் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தின் மூவின மக்கள் வாழும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளை கையாளும் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி பேசக்கூடிய பெண் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், தமிழ் மொழியில் சேவையாற்றக்கூடிய உளவள ஆலோசகர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களை அதிகரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன்போது, பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடையவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதைத் தடுக்கும் வகையில் பின்னணி சரிபார்ப்பு மற்றும் பொலிஸ் சான்றிதழ் நடைமுறைகளை வலுப்படுத்துதல், சிறுவர் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரித்தல், தமிழ் பேசும் பெண் பொலிஸ் அதிகாரிகளை அதிகரித்தல், ஆலோசனை மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை மேம்படுத்துதல், பெற்றோர் மற்றும் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சிறு குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான நடைமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லும் தாய்மார்களின் பிள்ளைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களிலும் உரிய பொறிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதுடன்
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதுடன், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, பெண்களின் பொருளாதார வலுவூட்டல், வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான சட்ட, கல்வி, சமூக மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உறுதியளித்தார்.

