(செல்வி வினாயகமூர்த்தி)
இலங்கை–இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (18) வெள்ளிக்கிழமை அம்பாறை மொண்டி ஹொட்டலில் நடைபெற்றது.
இந்தியா–இலங்கை வர்த்தகக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற இந்நிகழ்வை அம்பாறை மாவட்ட வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்ததுடன், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்கிரமாராச்சி, இலங்கை–இந்திய நட்புறவு இணைப்பாளர் ஆறுமுகம் அசோகா, ரி.கே. தயாகமகே, அம்பாறை நகர வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார வல்லுநர் எஸ். சுந்தர் உள்ளிட்ட 40 இந்திய முதலீட்டாளர்கள், துறைசார் அதிகாரிகள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையில் 5,555 பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், இந்திய முதலீட்டின் மூலம் இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி, நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இலங்கையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதன்போது அம்பாறை மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் இந்திய முதலீட்டாளர்களுடன் நேரடி கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், முதலீட்டு வாய்ப்புகள், இறக்குமதி–ஏற்றுமதி வர்த்தகம், புதிய சர்வதேச சந்தைகள் மற்றும் கூட்டு வர்த்தக முயற்சிகள் தொடர்பிலும் பேசப்பட்டது.
மேலும், வருகை தந்த இந்திய முதலீட்டாளர்கள் சுமார் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் முதலீடு செய்து இலங்கையில் பால் உற்பத்தியை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதன் மூலம் ஆரோக்கியமான இலங்கையரை கட்டியெழுப்ப முடியும்.அத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.




















