September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஞாயிறன்று அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய குடமுழுக்கு

ஞாயிறன்று அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய குடமுழுக்கு

.

(செல்வி வினாயகமூர்த்தி)

கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண யந்திர பிரதிஷ்டா ஏககுண்டபட்ச மஹாயாகப் பெருஞ்சாந்தி குடமுழுக்கு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட. ஆலயப் புனருத்தாரணப் பணிகளின் நிறைவாக, ஆகம முறைப்படி பல்வேறு விசேட கிரியைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி
வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு மேல் காரியசித்தி கணபதி ஆராதனை கிரியைகள் ஆம்பமாவதுடன் குலதெய்வ விஸ்வகர்மா ஆராதனை,கணபதி ஹோமம் உள்ளிட்ட கிரியைகளுடன் ஆரம்பமாகவுள்ளது.அன்றைய தினம் பி.பகல் 3.30 மணிக்கு பத்திரகாளி அம்மனின் பிரதான கலசம் தாங்கிய கஜ ஊர்வலம் குட்டிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து விமர்சையாக ஆரம்பமாகி வழமையாக தேர் செல்லும் வீதியினூடாக ஆலயத்தை வந்தடையவுள்ளது.

தொடர்ந்து, 12ஆம் திகதி அதிகாலை 3.30 பிரம்ம முகுர்த்த வேளையில் அம்மனுக்கான தூபிக்கலசம் நிர்ணயமும் பிரம்ம முகுர்த்த வேளையில் அம்மனுக்கான யந்திர பிரதிஷ்டையும் அம்மன் பிரதிஷ்டையும் அடையல் பிரதிஷ்டையும் பரிவார தெய்வங்களுக்கான யந்திரப்பிரதிஷ்டை உள்ளிட்ட கிரியைகளும் இடம்பெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் விசேட யாகபூஜைகள் இடம்பெற்று, முற்பகல் 10.45 மணிக்கு சுபமுகூர்த்த வேளையில் மகா குடமுழுக்கும், அதனைத் தொடர்ந்து அம்மன் பரிவாரத் தெய்வங்களுக்கான நன்னீராட்டுதலும் அம்மனுக்கான சுமங்கலி பட்டாம்பிகை திருக்கோல அலங்கார தரிசனமும் நடைபெறவுள்ளது.

இக்கிரியைகளை பிரதிஷ்டா பிரதம குருமணி விஷ்வபிரம்மஸ்ரீ சற்குணராசா குருக்கள் (உதயன் ஐயா) தலைமையில், உதவி குரு சிவஸ்ரீ. கனியவன் ஜயா மற்றும் சிவாச்சாரியார்கள் முன்னெடுக்கவுள்ளனர்.

ஆலய நிர்வாகத்தினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்களின் ஏற்பாட்டில் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

குடமுழுக்கு பெருவிழாவைத் தொடர்ந்து செப்டம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 12 நாட்களுக்கு விசேட மண்டலாபிஷேகப் பூஜைகள் நடைபெறவுள்ள நிலையில், பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அம்மனின் அருளாசியைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய நிருவாக சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *