September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் உரிமை தொடர்பில் ஜனாதிபதியிடம் அவசர தலையீடு கோரி தென்கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை

முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் உரிமை தொடர்பில் ஜனாதிபதியிடம் அவசர தலையீடு கோரி தென்கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை

முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் உரிமை தொடர்பில் ஜனாதிபதியிடம் அவசர தலையீடு கோரி தென்கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை

(ஷனா)

அரச சேவையில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்காத ஹிஜாப் அணிந்து பணியாற்றுவதில் நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாடு முழுவதும் ஒரே மாதிரியான தெளிவான கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு தென்கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீம்தீன் அவர்களின் தலைமையில் அவசர மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண்கள் தமது மத நம்பிக்கைக்கு ஏற்ப முகத்தை மறைக்காத ஹிஜாபை அணிந்து பணியாற்றுவது தொடர்பில் அரச நிறுவனங்களுக்கு இடையே மாறுபட்ட விளக்கங்களும் நடைமுறைகளும் காணப்படுவதாகவும், இது பெண் ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் தொடர்ச்சியான குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழில்முறை சீருடை, ஊழியர் அடையாளம், தொற்று கட்டுப்பாடு, மருத்துவ மற்றும் தொழில்சார் பாதுகாப்பு போன்ற நியாயமான தேவைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அவற்றை உறுதி செய்யும் வகையில் முகத்தை மறைக்காத ஹிஜாபை அணிவதற்கு அனுமதிக்கும் தெளிவான, நடைமுறைசார் மற்றும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.

கல்முனை வைத்தியசாலை சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துவது, விசாரணை நிறைவடையும் வரை பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு எதிரான பாதகமான நடவடிக்கைகளை தவிர்த்தல், சுகாதாரம் மற்றும் பொது நிர்வாக அமைச்சுகள் இணைந்து தேசிய கொள்கை அல்லது சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுதல், சம்பந்தப்பட்ட முஸ்லிம் பெண் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்தல் ஆகிய முக்கிய கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சியின் முக்கிய முன்னோடியான சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீம்தீன் அவர்கள் பெண்கள், கல்வி மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்டகாலமாக சமூகப் பணியாற்றி வருவதுடன் Muslim Women’s Council of Victoria, Australia அமைப்பின் தலைவராகவும், A.R. Munsoor Foundation மற்றும் Light for Learning ஆகிய அமைப்புகளின் ஸ்தாபாக தலைவராகவும் சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகிறார். கடந்த காலங்களில் பெண்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு உணர்வுபூர்வமான விடயங்களில், பிரச்சினைகள் இன, மத அல்லது சமூகங்களுக்கு இடையிலான கசப்பான நிலைமைகளை மேலும் வளராமல், சட்டத்தின் அடிப்படையில் தீர்வுகளை நாடி, தெளிவையும் நியாயமான நடைமுறையையும் ஏற்படுத்தும் முயற்சிகளில்  ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோரிக்கை எந்தவொரு சமூகத்திற்கும் விசேட சலுகை வழங்க கோரும் ஒன்றல்ல என தெரிவித்துள்ளனர். மாறாக, மத நம்பிக்கைகளை மதிக்கும் அதேவேளை, அரச சேவையின் தொழில்முறை மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளை பேணும் வகையில் சமத்துவம், தெளிவு, ஒரே மாதிரியான நடைமுறை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான மரியாதை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே கோரிக்கையாகும்.

“ஒரு பெண் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதன் அடிப்படையில் அல்ல; சட்டமும் ஒரே மாதிரியான நடைமுறையும் அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும்” என்பதே இந்த மனுவின் அடிப்படை நோக்கமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *