-செல்லையா பேரின்பraசா –
இலங்கையின் ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடம் பிடித்தவர் கலாபூஷணம், சாஹித்தியசூரி. ஏ.எல்.எம்.சலீம். அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூரில் அல்ஹாஜ் ஆதம்லெப்பை ஆமினா உம்மா தம்பதியினரின் இளைய புதல்வர் சலீம்.
தெட்ட பணிகளைத் துலங்க வைக்கும் செய்திச் செம்மல். காய்தல் உவத்தல் இன்றி கடவுளுக்கு சாட்சியமாக செய்திகளை ஒப்புவிக்கும் நீர்மையன். இன, மத, மொழி, பேதமின்றி ஊடக தர்மம் காத்த உத்தம புருஷன்.
மனித வாழ்வியல் பயணம் என்பது ஆயிரம் ஆண்டுகள் அல்ல. அது சொற்பமானது. இதற்குள் தன்நலம் கருதாமல் பிறர் நலனுக்காக உழைப்பவர்களே மேலாளர்கள்.
என்னை இன்னொருவர் காணும் போது அன்னவர் அகம் மலர வேண்டும். அதன் குறியாய் அவர் முகத்தில் புன்னகை பூத்திட வேண்டும் இதுவே நானெடுத்த பிறவிப் பயன் என்னும் கவிஞர் வீ.ஆனந்தனின் கவிதை வரிகளுக்கு ஊடகர் சலீம் சொந்தக்காரராகிவிட்டார்.
சத்தியம், நீதி, நேர்மை, நடுநிலை தவறாமை என்பவற்றை தாரகை மந்திரமாகக் கொண்டு உண்மைத்துவமாக வாழ்ந்த உயிர்ப்புள்ள ஊடகர் சலீம் என்றால் மிகையில்லை.
இலங்கையில் போர் மேகம் சூழ்ந்திருந்த இடர் மிகுந்த காலத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய சமாதானத் தென்றல் வீசிய கிராமமாக நிந்தவூர் மண் விளங்க மகத்துவம் சேர்த்த முன்னோடிகளில் ஊடகர் சலீமும் ஒருவர். அவர் மானிட நேயத்தின் வாசல் கதவு.
ஊடகத் துறையை முற்று முழுதாக கடிமணம் செய்த முழுநேர ஊடகர். கிழக்கிலங்கையில் வாழும் சகல இன மக்களினதும் நன்மதிப்புக்குப் பாத்திரமானவர். குறிப்பாக தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், கலை இலக்கியவாதிகள், கல்வியலாளர்கள், சமயத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பாடசாலை சமூகத்தினர், தொழிற்சங்க பிரதிநிதிகள், யாவராலும் மதிக்கப்பட்ட ஒருவர் என்றால் மிகையாகாது.
அஃதே தலைநகர் கொழும்பில் உள்ள ஊடக நிறுவனங்களினதும், யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடக நிறுவனங்களினதும், புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் ஊடக நிறுவனங்களினதும் பிரதம ஆசிரியர்கள் தொடக்கம் அங்கு பணியாற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் வரையும் மிகவும் நெருக்கமான நட்பை கொண்ட ஒருவர் என்றால் அது சலீமாகத்தான் இருக்கமுடியும் என்றால் மிகையில்லை.
தமிழ்த் தேசிய அரசியலுக்கும், முஸ்லிம் தேசிய அரசியலுக்கும் கிழக்கில் காய்தல் உவத்தல் இன்றி நடுநிலை தவறாமல் பணியாற்றிய உண்மைத்துவ ஊடக விருட்சம் சலீம்.
தமிழ் அரசியல் தலைவர்களான அமரர்களான செல்லையா இராசதுரை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இரா.சம்பந்தன் மாவை சேனாதிராசா ஜோசப் பரராஜசிங்கம், செழியன் ஜே.பேரின்பநாயகம் , வேல்முருகு மாஸ்ரர் மற்றும் அரசியல்வாதிகளான குணசேகரம் சங்கர் , க.பத்மநாதன், மாமனிதர் அ.சந்திரநேரு இரா.சாணக்கியன், எல்லைக் காவலன் ஏகாம்பரம் போன்வர்கள் சலீம் எங்கே என்று தேடும் அளவுக்கு அவரின் ஊடக தர்மத்திற்கும் நடுநிலையான எழுத்துக்கும் அங்கீகாரம் இருந்ததை எவராலும் மறுக்க முடியாது.
அஃதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்களான அப்துல் மஜீத், ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுத்தீன், ஏ.எல்.எம்,அதாவுல்லா , எம்.எல்.ஏம். ஹிஸ்புல்லா, ஹசனலி மயோன் முஸ்தபா உள்ளிட்ட பலர் சலீமின் உண்மைத்துவ ஊடக அறிக்கையிடலுக்காக தேடுவதை கண்ணாரக் கண்டுள்ளேன்.
வித்துவச் செருக்கும் வேண்டாம் செத்தாரைப் போல் வாழ்வோம் என்று வாழ்ந்த ஏ.எல்.எம். சலீம் சுமார் ஆறு தசாப்த காலம் தன் வஞ்சனையற்ற எழுத்தின் வீரியத்தால் சகல மக்களையும் கவர்ந்த இதயக்கனி.
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச செய்தியாளர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராகவும் பின்னர் இச் சங்கத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியவர். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் பின்னர் இச் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர் இதே போன்று இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும் அதன் உப தலைவர்களில் ஒருவராகவும் செயற்பட்டவர்.
1966 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையின் முழுநேர பிராந்திய செய்தியாளராக தனது பணியை ஆரம்பித்த இவர் தினபதி சிந்தாமணி, தினகரன், தினக்குரல், சுடர் ஓளி, நவமணி, விடிவெள்ளி, தமிழன், மற்றும் உதயன், ஈழநாடு, முரசு, போன்ற பல பத்திரிகைகளுக்கும், இலங்கை வானொலி, சக்தி எப்.எம், சூரியன் எப்.எம். தமிழ் ஒலி போன்ற வானொலி சேவைகளுக்கும், தமிழ் நெற், ஏ.பீ.சீ., தேனாரம் போன்ற ஊடக வலையமைப்பிற்கும் பிராந்திய செய்தியாளராக சிறப்பான பணியை முழுநேரமாக நல்கிய ஒருவர்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தும் வகையில் 1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிராம யாத்திரையை யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பித்து பொத்துவில் வரை முன்னெடுத்த தருணத்தில் தமிழ் தலைவர்களுடன் இணைந்து இந்த யாத்திரையில் பங்குபற்றி உடனுக்குடன் செய்திகளைத் திரட்டி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக முதுசம் என்று தமிழ்த் தலைவரான மாவை சேனாதிராசாவினால் பாராட்டப் பட்டவர்.
அஃதே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையுமான பயணத்திற்கும் ஊடக பங்களிப்பை நல்கியவர்.கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டுமென்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்ட தருணங்களில் நடுநிலை தவறாமல் செய்திகளை பல ஊடகங்களுக்கு அறிக்கையிட்டு ஊடகவியலாளர் இனம் மதம் பிரதேச வேறுபாடுகளை கிடப்பில் போட்டு விட்டு உண்மைகள் உறங்காமல் நடுநிலையாக உழைக்க வேண்டும் என்பதை துணிச்சலுடன் நிகழ்த்திக் காட்டிய அழகிய முன்மாதிரி சலீம் அவர்கள்.
இதே முஸ்லிம் மக்களின் தென்கிழக்கு பிரகடனம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சி மாநாடுகள், மெஸ்ரோ அமைப்பின் பல போராட்டங்கள், இஸ்ரேலிய எதிர்ப்பு போராட்டங்கள் உட்பட முஸ்லிம் மக்களின் நலன் சார்ந்த போராட்டங்களுக்கும் தனது உச்ச பட்ச ஊடக பங்களிப்பை வழங்கிய முதல்தர ஊடகர் சலீம்.
தமிழ்த் தேசிய கட்சிகள் பல கூறுகளாக பிரிந்து செயற்படுவது ஆரோக்கியமானதல்ல, யாவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கும் பணியை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் முன்னெடுத்தபோது அச் சங்கத்தின் தலைவராக சலீம் செயற்பட்டார்.மறைந்த ஊடகவியலாளர்களான மாமனிதர் சிவராம், நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன் மூத்த ஊடகர்களான இரா.துரைரெட்ணம், சுவீஸ் நாட்டில் வாழும் சண் தவராசா, த.வேதநாயகம் மற்றும் எஸ். ஜெயானந்தமூர்த்தி, நிராஜ் டேவிட், செல்லையா பேரின்பராசா, பா.அரியநேத்திரன் போன்றோர் இப் பணியை முன்னெடுத்த வரலாறும் உண்டு.
இதே வேளை தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு புரிய வைக்கும் நோக்கில் போர் நிறுத்தம் ஏற்பட்ட காலத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள ஐம்பது முஸ்லிம் ஊடகவியலாளர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாட வைப்பதற்கும் விடுதலைப் புலிகளின் நீதிமன்ற கட்டமைப்பு நிர்வாக கட்டமைப்பு வங்கி கட்டமைப்பு கலை இலக்கிய செயற்பாடு போன்ற பல விடயங்களைப் பார்வையிட ஒருங்கிணைப்பு செய்தவர்களுள் சலீமும் ஒருவர்.
இதே வேளை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மூன்று தினங்கள் விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் மானிடத்தின் தமிழ்க் கூடல் இடம்பெற்றது. இறுதி நாளன்று இந் நிகழ்வின் நிறைவாக ஐந்து மரக் கன்றுகள் நடப்பட்டது.அதில் ஒரு மரக் கன்றை சலீமின் கரங்களால் நடவேண்டுமென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அறிவித்திருந்தமை இவருக்கு அளிக்கப்பட்ட உயர் கௌரவமாகும்.
நூற்றுக்கணக்கான விருதுகளையும் பாராட்டு மடல்களையும் பெற்ற இவர் இலங்கை பத்திரிகைப் பேரவையினால் பல வருடங்களுக்கு முன்னர் ” வாழ்நாள் சாதனையாளர் ” விருதளித்து கௌரவிக்கப்பட்டவர்.இருப்பினும் சலீம் என்ற ஊடகப் பேராளுமையின் எழுத்துக்கள் உணரப்படும் போதெல்லாம் அவர் எம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார்.
அன்னார் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் மூத்த ஊடகர்களான அன்னாரின் ஆதர்ச நண்பர்களான இரா.துரைரெட்ணம் அவர்களையும். தினகரன் வார மஞ்சரியின் பிரதம ஆசிரியர் க.குணராசாவையும் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்ற வேளையில் அழுதார்.பின்னர் தனது நண்பர்களான வீ.தனபாலசிங்கம், வித்தியாதரன், எஸ்.ஸ்ரீகஜன், அன்னலெட்சுமி இராசதுரை, இரா.செல்வராசா, எஸ்.பாண்டியன், சுவீஸ் நாட்டில் வாழும் வேதா, சண் தவராசா, சந்திரப்பிரகாஷ் மற்றும் யாழ் தில்லைநாதன், சிரேஷ்ட எழுத்தாளர் உமா வரதராஜன்,ஓய்வு பெற்ற மாகாண கலாசார பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் கல்முனை ஊடக வலையமைப்பின் ஸ்தாபகர் புவிநேசராசா கேதீஸ் போன்றவர்களை விசாரித்தார். இவரே எனது ஊடகத்துறை குருநாதர் என்பது நான் பெற்ற பெரும் பேரின்பமாகும்.
இருப்பினும் சலீம் இல்லாத ஊடகத்துறை பூந்தோட்டம் தனது வனப்பை இழந்துள்ளதை இன்று உணர முடிகின்றது.
” மக்கள் குரலோன் “
செல்லையா பேரின்பராசா
துறைநீலாவணை .

