இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்க, இன்று (நவம்பர் 24) தனது 58 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
1968 ஆம் ஆண்டு பிறந்த அவர், நீண்டகால அரசியல் பயணத்தின் ஊடாக இலங்கை அரசியலில் தனக்கென ஓர் இடத்தைப் பதித்துள்ளார். மாணவர் பருவத்திலிருந்தே அரசியல் செயற்பாடுகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர், பல்வேறு அரசியல் பொறுப்புகளை வகித்து நாட்டின் உயரிய பதவியான ஜனாதிபதி பதவியை அடைந்துள்ளார்.
ஆரம்பக் கல்வியும் பல்கலைக்கழக வாழ்க்கையும்
அநுர குமார திசாநாயக்க தனது ஆரம்பக் கல்வியை அநுராதபுரம், தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பித்தார். பின்னர் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் சிறப்பாகத் திறமைகளை வெளிப்படுத்தினார்.
1992 ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்குத் தெரிவான அவர், 1995 ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
அரசியல் பயணத்தின் ஆரம்பம்
1993 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி (JVP) மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கிய காலப்பகுதியில் அநுர குமார திசாநாயக்கவும் கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார்.
1997 ஆம் ஆண்டு சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், அதே ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவிலும் இடம்பிடித்தார். தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு கட்சியின் அரசியல் பீடத்திலும் இணைந்துகொண்டார்.
1999 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்தல் அரசியலில் தனது பயணத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் ஊடாக முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார்.
நாடாளுமன்றமும் அமைச்சுப் பொறுப்புகளும்
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த அநுர குமார திசாநாயக்க, அப்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
2008 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அவர், 2010 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். பின்னர் 2015 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
கட்சித் தலைமைத்துவம் முதல் ஜனாதிபதி பதவி வரை
2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7 ஆவது தேசிய மாநாட்டில் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பை அநுர குமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து தேசிய மக்கள் சக்தி (NPP) என்ற அரசியல் கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.
நீண்டகால அரசியல் போராட்டங்களையும் தேர்தல் சவால்களையும் கடந்து வந்த அவர், 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
மாணவர் அரசியலில் ஆரம்பித்த அவரது பயணம், மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைத்துவம், நாடாளுமன்றம், அமைச்சுப் பதவி எனப் பல கட்டங்களைக் கடந்து இன்று நாட்டின் ஜனாதிபதி என்ற உயரிய பொறுப்பை அடைந்துள்ளது.
இந்நிலையில், இன்று தனது 58 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.