கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கும் என்றும், நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (18) பதுளையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, சட்டங்களை இயற்றுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்றும், சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பது பொலிஸார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறைக்கே இறுதி அதிகாரம்
சட்டத்தை விளக்கி நடைமுறைப்படுத்தும் இறுதி அதிகாரம் நீதித்துறைக்கே, குறிப்பாக உயர் நீதிமன்றத்திற்கே உரியது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியான பின்னர் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மதிப்பளித்து அவற்றுக்கு ஏற்பச் செயற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகளை எதிர்பார்ப்பது முறையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு விவகாரம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தப் பின்னணியில், ஞானசார தேரருக்கு மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனப் பௌத்த பிக்குகள் மற்றும் எதிர்க்கட்சியினர் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்: தமிழ்வின்
