இலங்கையின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (UNGA) 81ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி நியூயோர்க்கில் உரையாற்றவுள்ளார்.
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் மரண தண்டனையில் இருந்து மன்னிப்பபு வழங்கும் கோரிக்கை தொடர்பிலும், ஐ.நா விஜயத்தின்போது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் இராஜதந்திர நகர்வு தொடர்பிலும் வருகைதரும் சவூதி அரபிய பிரதிநிதிகளுடன் நேரிலும் பேசவுள்ளதாகவும் அமைச்சர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்
இதன்போது சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கையின் தேசிய அறிக்கையை அவர் முன்வைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உயர்மட்ட வார நிகழ்வுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அமைச்சர் விஜித ஹேரத் செப்டம்பர் 26ஆம் திகதி நியூயோர்க் செல்லவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அவரது உரையில், இலங்கையின் தற்போதைய வெளிவிவகாரக் கொள்கை முன்னுரிமைகள் மற்றும் முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடுகள் முன்வைக்கப்படவுள்ளன.
இதனுடன், பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளுடனான இருதரப்பு மற்றும் பல்தரப்பு சந்திப்புகளிலும் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்.
இந்த சந்திப்புகளின்போது சர்வதேச பங்காளி நாடுகளுடனான இலங்கையின் ஒத்துழைப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தைக் கொண்ட சிறிய நாடாக, பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில், ஐ.நா. பொதுச்சபை இலங்கையின் தேசிய நலன்களையும் பல்தரப்பு ஒத்துழைப்புக்கான அதன் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதற்கான முக்கிய தளமாக அமைந்துள்ளது.
2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 80ஆவது கூட்டத்தொடரின்போதும் அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் பல்தரப்பு நிறுவனங்களுடனான ஈடுபாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் சர்வதேச பங்காளிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
உக்ரைன் போர், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள், பாலஸ்தீன விவகாரம், காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, அணு ஆயுதங்களால் ஏற்படும் அபாயங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் நிலையான அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81ஆவது கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
“நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றங்களை நிர்வகித்தல்: அனைவருக்கும் பயனளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை” என்ற தொனிப்பொருளின் கீழ், பொதுச்சபையின் உயர்மட்ட வார நிகழ்வுகள் செப்டம்பர் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நியூயோர்க்கில் நடைபெறுகின்றன.
போர்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள், காலநிலை தொடர்பான சவால்கள், சமத்துவமின்மை, வேகமாக மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் பல்தரப்பு அமைப்பின் மீதான குறைந்து வரும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு மத்தியில் இந்தத் தொனிப்பொருள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி நிரலின்படி, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, அபிவிருத்தி, காலநிலை நடவடிக்கைகள், அணு ஆயுதக் குறைப்பு மற்றும் பல்தரப்பு நிர்வாகக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இக்கூட்டத்தொடரில் கவனம் செலுத்தப்படவுள்ளது.