
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார், இலங்கையில் இராமகிருஷ்ண மிஷன் என்ற பேரியக்கத்தை கொண்டுவந்த பெருமகனார்.
இராமகிருஷ்ண மிஷனில் இணைந்த இலங்கையின் முதல் துறவியும் அவரே.
அவர் கொணர்ந்த அந்த பேரியக்கம் இன்று நூற்றாண்டு விழா காண்கிறது.
இலங்கையில் ஆன்மிக விழிப்புணர்வு, கல்வி மேம்பாடு மற்றும் மனிதநேயப் பணிகளில் அழியாத முத்திரையைப் பதித்த அமைப்பாக ராமகிருஷ்ண மிஷன் திகழ்கிறது.
1926 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் திகதி சுவாமி விபுலானந்தரின் அர்ப்பணிப்பான முயற்சியால் இலங்கையில் ராமகிருஷ்ண மிஷன் தனது அதிகாரப்பூர்வப் பணியை ஆரம்பித்தது.
கடந்த நூற்றாண்டு முழுவதும் இவ்வமைப்பு சமய, கல்வி, சமூக மற்றும் கலாசார வளர்ச்சிக்காக எண்ணற்ற சேவைகளை ஆற்றியுள்ளது.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மிகக் கொள்கைகளையும், சுவாமி விவேகானந்தரின் மனிதநேய இலட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவான இம்மிஷன், இலங்கை முழுவதும் பல்வேறு கல்வி மற்றும் சமய நிறுவனங்களை நிறுவி மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
06.06.1926 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் சுவாமி விபுலானந்தரின் பெருமுயற்சியின்பேரில்வெள்ளிக்கிழமை மடத்தில் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் நிறுவப்பட்டது.
பின்னர் 17.07.1929 இல் கொழும்பில் ராமகிருஷ்ண சங்கமும் ஆரம்பிக்கப்பட்டு அது பாடசாலைகளை நிருவகிக்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியது.
பின்னர் 22.10.1930 ஆம் ஆண்டு மிஷன் நிர்வாகக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு, இலங்கை இராமகிருஷ்ண சங்கம் உத்தியோகபூர்வமாக 48, ஹாமர் சதுக்கம் எனும் முகவரியில் சுவாமி சர்வானந்த ரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.கல்வி மற்றும் சமூகப் பணிகள் விரிவுபடுத்தப்பட்டன.சங்க யாப்பும் தயாரிக்கப்பட்டன.
06.03.1935 ஆம் ஆண்டு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதி 40 ஆம் இலக்கத்தில் இருந்த காணி இராமகிருஷ்ண மிஷன் தலைமைப் பீடத்திற்காக கொள்வனவு செய்யப்பட்டு சுவாமி அஷங்கானந்தர் தலைமையில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
சுவாமி விபுலானந்தர் இலங்கையின் பொறுப்பை ஏற்று பல்வேறு சேவைகளை முன்னெடுத்தார். அவரது வழிகாட்டுதலில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று, மாணவர்களின் ஒழுக்கம், ஆன்மிகம் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்யப்பட்டன.
1942 முதல் 1944 வரையான காலப்பகுதியில் இரண்டாம் உலகப் போரின் சவால்களையும் எதிர்கொண்டு மிஷன் தனது சேவைகளைத் தொடர்ந்தது.
போர் நிமித்தம் கொழும்பு ஆச்சிரமமும் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமமஹம்சரின் புனிதமான அஸ்தி அடங்கிய கலசமும் தற்காலிகமாக 1942 ஆம் ஆண்டு சித்திரை மாதம் லுணுகலைக்கும் பின்பு அதே ஆண்டில் ஜூலை மாதம் மட்டக்களப்பிற்கும் பின்பும் மீண்டும் கார்த்திகை மாதம் ஹம்டன் வீதியில் 60-வது ஒழுங்கைக்கும் மாற்றப்பட்டது. தற்போது அமைந்துள்ள இலங்கை தலைமையகம் ஜூலை மாதம் மீண்டும் புனரமைக்கப்பட்டது.
போர் காரணமாக ஏற்பட்ட இடர்பாடுகளிலும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
17.08.1952 ஆம் ஆண்டு மிஷனின் புதிய நிர்வாக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. அதாவது கதிர்காம தலயாத்திரிகர்களுகான ராமகிருஷ்ணமடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது .அங்கு தங்கும் இட வசதியுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது .சமய சொற்பொழிவுகளும் பஜனைகளும் பக்த அடியார்களுக்காக அங்கு நடைபெற்றன.
1960களில் இராமகிருஷ்ண மிஷன் நிருவாகத்தில் 43 வருடங்களாக இருந்த 26 பாடசாலைகள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டன.
1963 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஞாயிறு அறநெறி கல்வி நிறுவனங்கள் மிஷனின் நிர்வாகத்தின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
10.05.1968 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாணவர் இல்லத்திற்காக இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி விரேஸ்வரானந்த ஜீ மகராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது
27.05.1972 ஆம் ஆண்டு சுவாமி பிரேமாத்மானந்தரால் கல்லடி உபோடையில் ஸ்தாபிக்கப்பட்ட ஆண்களுக்கான இல்லம் மற்றும் ஆச்சிரமும் திறந்து வைக்கப்பட்டது.
01.07.1990 இல் சுவாமி ஜீவனானந்த் மகராஜ் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் புது முகாமையாளராக பொறுப்பேற்றார். ஏப்ரல் 1992 இல் சாரதா பாலர் பாடசாலை நிர்வாகத்தை ராமகிருஷ்ண மிஷன் பொறுப்பேற்றது.
மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட சமூக மற்றும் அரசியல் சவால்களையும் மீறி, மிஷன் தனது சேவைகளை இடையறாது முன்னெடுத்தது. குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
1994, 1996 மற்றும் 1997 ஆகிய ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி, புதிய கட்டிடங்கள் அமைத்தல், மாணவர் நலத் திட்டங்கள் மற்றும் ஆன்மிகப் பணிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன.
2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரழிவுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள், கல்வி உதவிகள் மற்றும் மனிதாபிமான நிவாரணங்கள் வழங்கப்பட்டன. சுமார் 150 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டமை மிஷனின் மனிதநேயப் பணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
2021 ஆம் ஆண்டு புதிய நிர்வாகப் பொறுப்புகள் ஏற்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு சமய, கல்வி மற்றும் சமூக நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கை இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் வழிகாட்டலில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ஏற்பாட்டில் மலையகத்தில் கொட்டகலை ஹரிங்டன் தோட்டத்தில் சுவாமி சிவானந்த நலன்புரி நிலையம் 2025 இல் ஸ்தாபிக்கப்பட்டது. மலையகத்திற்கான இப் பாய்ச்சல் அப்பிராந்தியத்தில் பாரிய ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
2025 ஜூலை 6 ஆம் திகதி நூற்றாண்டு விழா நிகழ்வுகள் இலங்கை இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் வழிகாட்டலில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ஏற்பாட்டில் சிறப்பாகத் தொடங்கப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு நினைவு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நூற்றாண்டை நிறைவு செய்யும் இலட்சியப் பயணம்
ஒரு நூற்றாண்டைக் கடந்துள்ள இலங்கை ராமகிருஷ்ண மிஷன், ஆன்மிகப் பணியோடு மட்டுமல்லாமல் கல்வி, சமூகநலம், மனிதநேயம் மற்றும் தேசிய ஒற்றுமைக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
“மனித சேவையே இறை சேவை” என்ற உயரிய கொள்கையை வாழ்வியல் நெறியாகக் கொண்டு, எதிர்கால சந்ததியினருக்கும் ஒளிவிளக்காக விளங்கும் சேவைப் பயணத்தை இம்மிஷன் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
வாழ்க; வளர்க இராமகிருஷ்ண மிஷன் பணிகள்!
இராமகிருஷ்ண மிஷன் அபிமானி
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு


