September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > 34 ஆண்டுகால கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் அதிபர் டேவிட் அமிர்தலிங்கத்துக்கு பாராட்டு.

34 ஆண்டுகால கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் அதிபர் டேவிட் அமிர்தலிங்கத்துக்கு பாராட்டு.

(செல்வி வினாயகமூர்த்தி)

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் எதிர்வரும் 25ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கான முன்கூட்டிய பாராட்டு நிகழ்வு இன்று (16) புதன்கிழமை ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அதிபர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

இதில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார், ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் சோ. செல்வம் மற்றும் ஆலையடிவேம்பு கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின்போது ஓய்வு பெறவுள்ள அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், அவரது நீண்டகால கல்விச் சேவையைப் பாராட்டி சேவைநலன் பாராட்டு வாழ்த்துப்பாவும் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கலந்து கொண்ட அதிபர்கள் அவரது கல்விச் சேவைக்கால அனுபவங்களையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்து பாராட்டுரை வழங்கினர்.

1992 நவம்பர் 2ஆம் திகதி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர், 20 ஆண்டுகள் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசியபாடலையில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், பின்னர் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக நியமிக்கப்பட்டு திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றியதுடன் பின்னர் பிரதி அதிபராக தரமுயர்த்தப்பட்டு அதே பாடசாலையி்ல் பணியாற்றினார்.பின்னர் 2013 முதல் 2021 வரை அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தில் அதிபராக 08வருடங்கள் கடமையாற்றியதுடன் 2021- 2026.09.25 அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையிலும் அதிபராக பணியாற்றி வருகின்றார்.

34 ஆண்டுகால கல்விச் சேவையை நிறைவு செய்யும் இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் B.A., M.A. (அரசியல் விஞ்ஞானம்), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணி உள்ளிட்ட பல்வேறு கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளைப் பெற்றுள்ளார்.

இவரது கல்விச் சேவையைப் பாராட்டி 2019ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தினால் “தியாக தீபம்” விருதும், 2023ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் “குரு பிரதீபா பிரபா” கௌரவ விருதும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *