(செல்வி வினாயக மூர்த்தி )
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிலவும் கடும் வறட்சியால் கால்நடைகள் குடிநீரின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், அவற்றுக்கான குடிநீர் தட்டுப்பாட்டைத் தற்காலிகமாக நிவர்த்தி செய்யும் நடவடிக்கையை ஆலையடிவேம்பு பிரதேசசபை இன்று சனிக்கிழமை (12) முன்னெடுத்துள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட ஏத்தாளை குளப்பகுதியில் கால்நடைகளுக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்தும் வகையில், வவுசர் மூலம் குடிநீர் பெற்றுக்கொடுத்து தற்காலிக தீர்வொன்றை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இலங்கையின் பல பகுதிகளில் நீர்நிலைகள் வற்றிவரும் நிலையில், ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் நிலவும் கடும் வறட்சி காரணமாக பல நீர்நிலைகள் வற்றியுள்ளதுடன், மேய்ச்சல் நிலங்களும் காய்ந்து காணப்படுகின்றன. இதனால் கால்நடைகளுக்கு போதிய குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக கால்நடைகள் எதிர்நோக்கும் அவசர குடிநீர் தேவையை கருத்திற்கொண்டு, ஆலையடிவேம்பு பிரதேசசபையினால் இந்தத் தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையின்போது ஆலையடிவேம்பு பிரதேசசபை உப தவிசாளர் க. ரகுபதி மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களான பா. கதீகரன், வி. லோகநாயகம் ஆகியோர் குறித்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.





