September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > நாடாளாவிய ரீதியில் 341 இளம் ஊடகவியலாளர்கள்; பொத்துவில் பிரதேசத்தில் ஈஸ்வரன் தினேஸ்கா தெரிவு

நாடாளாவிய ரீதியில் 341 இளம் ஊடகவியலாளர்கள்; பொத்துவில் பிரதேசத்தில் ஈஸ்வரன் தினேஸ்கா தெரிவு

நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் ஊடகத்துறையில் நாட்டமுள்ளவருமான செல்வி ஈஸ்வரன் தினேஸ்கா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் இன்பெக்டர் ஏத்தம் கிராமதம்தைச் சேர்ந்த இவர் சமூகப்பணிகளிலும் அதிகம் ஈடுபாடு உடையவர்

இளம் ஊடகவியலாளர்களின் திறன்களை மேம்படுத்தி, பொறுப்பானதும் தரமானதுமான ஊடகக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் இணைந்து இளம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விசேட பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இப்பயிற்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (04) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் திறந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததுடன், விண்ணப்பித்தவர்களுக்கு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான இளம் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ஊடகத்துறையில் ஆர்வமுள்ள பலர் விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் பங்கேற்ற நிலையில், பொத்துவில் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளம் பிராந்திய ஊடகவியலாளராக ஈஸ்வரன் தினேஸ்கா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இப்பயிற்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தலைமையில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் இலங்கை இளைஞர் விவகார பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பயிற்சித் திட்டத்தின் முதலாவது அமர்வு, ஜனாதிபதியின் ஊடக ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சந்தன சூரியபண்டார தலைமையில் நடைபெற்றது.

இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் புகைப்படக்கலை, காணொளி தயாரிப்பு, அறிவிப்பாளர் பயிற்சி, பத்திரிகைத்துறை, அபிவிருத்தித் தொடர்பாடல், டிஜிட்டல் ஊடகம் மற்றும் புதிய ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இளம் ஊடகவியலாளர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதுடன், பொறுப்புணர்வுடனும் தரத்துடனும் ஊடகப் பணியை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே இப்பயிற்சித் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

ஊடகத்துறையில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த தெரிவு அமைந்துள்ளமை மேலும் சிறப்பாகும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *