September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 169 மாணவர்கள் சித்தி. திருக்கோவில் கல்வி வலயம் மீண்டும் சாதனை.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 169 மாணவர்கள் சித்தி. திருக்கோவில் கல்வி வலயம் மீண்டும் சாதனை.

(செல்வி வினாயகமூர்த்தி)

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (02) புதன்கிழமை வெளியாகியுள்ள நிலையில் திருக்கோவில் கல்வி வலயம் இவ்வாண்டும் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட 882 மாணவர்கள் தோற்றிய நிலையில், 810 மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 91.84 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும், 169 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு பெறுபேறுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு 818 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், 705 மாணவர்கள் மாத்திரமே 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 86.19 சதவீதத்தைப் பதிவு செய்திருந்தனர். இவ்வாண்டு 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 105 பேரால் அதிகரித்துள்ளது.
அதேவேளை, வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டின் 124 இலிருந்து 169 ஆக அதிகரித்துள்ளது.
கோட்ட ரீதியாகப் பார்க்கும்போது, திருக்கோவில் கோட்டம் 93.32 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளதுடன் பொத்துவில் கோட்டம் 91.72 சதவீதத்தையும், ஆலையடிவேம்பு கோட்டம் 90.23 சதவீதத்தையும் பதிவு செய்துள்ளன.
குறிப்பாக, திருக்கோவில் கோட்டத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் 57 இலிருந்து 90 ஆகவும், ஆலையடிவேம்பு கோட்டத்தில் 58 இலிருந்து 66 ஆகவும், பொத்துவில் கோட்டத்தில் 9 இலிருந்து 13 ஆகவும் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்து வரும் திருக்கோவில் கல்வி வலயத்தின் தொடர்ச்சியாக சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்து வரும் திருக்கோவில் கல்வி வலயத்தின் இம்முன்னேற்றம், வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டம், திருக்கோவில் கோட்டம் மற்றும் பொத்துவில் கோட்டம் ஆகியவற்றில் பணியாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றியாகக் கருதப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *