September 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > நற்பிட்டிமுனையின் பெண் வைத்தியராக சாதனை படைத்தார் பாத்திமா ஷிரீன்

நற்பிட்டிமுனையின் பெண் வைத்தியராக சாதனை படைத்தார் பாத்திமா ஷிரீன்

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவப் பீடக் கற்கையை நிறைவு செய்து அம்பாறை பொது வைத்தியசாலையில் இணைவு

பெண்களின் மருத்துவக் கனவுக்குப் பாதையமைத்த வரலாற்றுச் சாதனை; கிராம மக்கள் பெருமிதம்

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனைக் கிராமத்தின் (முஸ்லிம் பிரிவு) வரலாற்றுப் பக்கங்களில் புதிய மைல்கல்லாக, அந்நிலத்தின் முதலாவது பெண் வைத்தியராக வைத்தியர் மஃமூது பாத்திமா ஷிரீன் (Dr. Fathima Shirin) சாதனை படைத்து ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த 1986 ஆம் ஆண்டு நற்பிட்டிமுனையின் முதலாவது ஆண் வைத்தியராக வைத்தியர் எம்.சி. மாஹிர் தெரிவு செய்யப்பட்டு, காலி ருஹுணு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுச் சேவையாற்றத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து பலர் மருத்துவத் துறைக்குச் சென்றபோதிலும், அப்பகுதியிலிருந்து பெண்கள் யாரும் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகாத நிலை நீடித்து வந்தது. அந்நிலையினையே பாத்திமா ஷிரீன் தனது விடாமுயற்சியால் மாற்றியமைத்துள்ளார்.

மர்ஹும் இஸ்மாயில் மஃமூது மற்றும் அபூபக்கர் சித்தி வாஜிதா (பரீனா) தம்பதியினரின் 4ஆவது புதல்வியான பாத்திமா ஷிரீன், தனது ஆரம்பக் கல்வியை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 5 வரை பயின்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தார். அதனைத் தொடர்ந்து கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் உயர்கல்வி வரை தொடர்ந்தார்.

கப்/கார்மேல் பற்றிமா கல்லூரியில் கபொத சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்று (2018/2019) கல்விப் பொதுத் தராதர உயர் தாரப் பரீட்சைப் பேறுகளின் அடிப்படையில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திற்குத் தெரிவானார்.

தனது மருத்துவக் கற்கை நெறியைச் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ள வைத்தியர் பாத்திமா ஷிரீன், கடந்த 28.08.2026 முதல் தனது மருத்துவச் சுழற்சிமுறைப் பயிற்சிக்காக (Internship) அம்பாறை பொது வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

நற்பிட்டிமுனை மண்ணில் மருத்துவத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அற்றிருந்த நீண்டகாலக் குறையை நிவர்த்தி செய்து, ‘முதலாவது பெண் வைத்தியர்’ என்ற வரலாற்றுப் பெருமையைத் தனதாக்கியுள்ள இவரின் இச்சாதனையானது, அப்பகுதி வீடமைப்பு மற்றும் சமூக மட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், தற்போது பல பெண் பிள்ளைகள் மருத்துவத் துறையை நோக்கிப் பயில ஊக்குவிப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *