October 19, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > பெரியநீலாவணையில் மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம் , காவேரி மொபைல் செயலி அறிமுகம்; அச்சு இயந்திரம் அன்பளிப்பு

பெரியநீலாவணையில் மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம் , காவேரி மொபைல் செயலி அறிமுகம்; அச்சு இயந்திரம் அன்பளிப்பு

பெரியநீலாவணை: காவேரி கல்விசார் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம் மற்றும் காவேரி விளையாட்டுக் கழகத்தின் புதிய மொபைல் செயலி (Mobile Application) அறிமுக விழா ஆகிய இரட்டை நிகழ்வுகள் இன்று மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றன.


கமு/ சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, காவேரி கல்விசார் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் திரு. வே. அரவிந்தன் மற்றும் விளையாட்டுப் பிரிவுத் தலைவர் திரு. தி. சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சமூகப் பெரியார்கள், கல்விமான்கள், ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினர்கள், விளையாட்டுப் பிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல் மற்றும் இறை வணக்கம் இடம்பெற்றன.

காவேரி கல்விசார் அபிவிருத்தி ஒன்றியத்தினால் நடத்தப்படும் இலவச மாலை நேர வகுப்பு மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் மங்களகரமாகத் தொடங்கின.

காவேரி விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் திரு. ரி. ஐங்கரன் (ஆசிரியர்) வரவேற்புரையை நிகழ்த்த, தொடர்ந்து கழகத்தின் தலைவர் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, வாராந்த வகுப்புகளுக்குப் பொறுப்பான அதிபர் திரு. ரி. தவராஜ் உரையாற்றுகையில், ஒன்றியத்தின் பெறுமதியான செயற்பாடுகள் மற்றும் ஆக்கபூர்வமான திட்டமிடல்கள் குறித்துப் பெற்றோர்களுக்கும் அதிதிகளுக்கும் விரிவாக விளக்கமளித்தார்.

இலவச சீருடை விநியோகம்

இதனைத் தொடர்ந்து, ஒன்றியத்தின் இலவச வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விப் பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும், அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கிலும் இலவச சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த சீருடைகளுக்கான முழுமையான அனுசரணையை, பெரியநீலாவணை செல்லத்துரை வீதியைச் சேர்ந்த, தற்போது மால்டா நாட்டில் வசிக்கும் திரு. அருணாசலம் சஜீவன் வழங்கியிருந்தார்.

‘காவேரி’ மொபைல் செயலி அறிமுகம்

கழகத்தின் புதிய மைல்கல்லாக, காவேரி விளையாட்டுக் கழகத்தின் பிரத்தியேக இணையத்தள செயலி (Mobile App) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இதற்கான அனுசரணையை பெரியநீலாவணையைச் சேர்ந்த, தற்போது கனடாவில் வசிக்கும் திரு. திருமதி. மதன்ராஜ் சியாமினி தம்பதியினர் வழங்கியிருந்தனர்.


இச்செயலியின் மூலம் கழகத்தின் கல்விசார் தகவல்கள், விளையாட்டு நிகழ்வுகள், செய்திகள், வீரர்களின் விபரங்கள், அனுசரணையாளர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை மாணவர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பாடசாலைக்கு அச்சு இயந்திரம் அன்பளிப்பு

இந்நிகழ்வில், காவேரி விளையாட்டுக்கழகத்தின் அழைப்பை ஏற்று சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பாண்டிருப்பைச் சேர்ந்த சமூக சேவகி திருமதி. விஜியகுமாரன் குபேரலட்சுமி, நிகழ்வு நடைபெற்ற கமு/ சரஸ்வதி வித்தியாலய பாடசாலையின் மிக முக்கியமான தேவையாக இருந்த அச்சு இயந்திரம் (Printing Machine) ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

மேலும், கழகத்தின் கல்விச் செயற்பாடுகளுக்குத் தன்னாலான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.


இந்நிகழ்வில் சரஸ்வதி வித்தியாலய அதிபர் திருமதி. வாசுகி ஐங்கரன், ஒன்றியத்தின் கல்விச் செயற்பாடுகளுக்கான இணைப்பாளர் திரு. எஸ். மனுபராஜ், காவேரியின் பொருளாளர் திரு. புண்ணியகுமார், ஆலயத் தலைவர்கள், கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறற்ன.


நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அதிதிகள், கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் காவேரி ஒன்றியத்தின் இந்த இரட்டைச் சேவைகளையும் அர்ப்பணிப்பையும் வெகுவாகப் பாராட்டிப் பேசினர். இறுதியாக, நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *