(வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவையொட்டி , மூன்று புதிய நூல்களின் வெளியீட்டு விழா (10.10.2026) சனிக்கிழமை கல்லடி சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை ராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜி மஹராஜ் தலைமையில் இவ் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கலாபூஷணம் சதாசிவம் சரவணபவன் எழுதிய “தியாகத்தின் திருவுருவம் சுவாமி ஜீவனானந்தர்” எனும் நூலும், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நிலாந்தினி செந்தூரன் எழுதிய “கிழக்கிலங்கையின் கல்வி வளர்ச்சியில் ராமகிருஷ்ண மிஷன்” எனும் நூலும், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் எழுதிய “தேடலின் விடியலினி” எனும் கவிதைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ரி. சுந்தரேசன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி மோ. அகிலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .
சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. ஞானரெத்தினம், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா, முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டு, நூல் அறிமுக உரை மற்றும் நயவுரை ஆற்றி சிறப்பித்தனர்.
சுவாமிகளால் எழுத்தாளர்கள் அதிதிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். சுவாமிகளான உமாதீஷானந்தா ஜீ மற்றும் ப்ரம்மயானந்தா ஜு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சுவாமி ஜீவனானந்தா ஞாபகார்த்த விருதை கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பெற்ற இளநிலை மருத்துவர் தணிகாசலம் வினுராஜ் ( அக்கரைப்பற்று) மேடையில் சான்றிதழ் வழங்கத கௌரவிக்கப்பட்டார்.
இராமகிருஷ்ண மிஷன் பக்தர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் ஆர்வலர்கள் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






