October 7, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு.

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு.

(செல்வி வினாயகமூர்த்தி)

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு, பாடசாலை அதிபர் க. ஜயந்தன் தலைமையில் இன்று (06) செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

ஆசிரியர்கள் பாரம்பரிய முறைப்படி வெற்றிலை வழங்கி மாணவர்களால் வரவேற்கப்பட்டதுடன் மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, பாடசாலை நுழைவாயிலில் இருந்து ஆசிரியர்கள் பேண்ட் வாத்திய இசையுடன் மாணவர்களால் மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர்.அத்துடன் ஆசிரியர் கீதம் ஆசிரியர்களினால் பாடப்பட்டமை நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆசிரியர்களுக்கு மாணவர்களால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மேலும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் சேவையையும் பாராட்டும் வகையில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டது. இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் வாழ்த்துரைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையையும், மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் பாராட்டும் வகையில் ஆசிரியர் தின நிகழ்வு சிறப்பாக அமைந்ததுடன் பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பெற்றோர்கள் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ. செல்வம், பிரதி அதிபர்களான இரா. சதீஷ், கி. மகேஷ்வரன், க. கிருபராணி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *