November 20, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > நாடளாவிய ரீதியில் நாளை ஆரம்பமாகும் ‘வீடு வீடாகத் திறன் பிரச்சாரம்’ – கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலும் இன்று முன்னெடுப்பு!

நாடளாவிய ரீதியில் நாளை ஆரம்பமாகும் ‘வீடு வீடாகத் திறன் பிரச்சாரம்’ – கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலும் இன்று முன்னெடுப்பு!

சௌவியதாசன்


​கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ‘தேசிய திறன் முன்னேடுப்பு’ (National Skills Drive) திட்டத்தின் கீழ், “வீடு வீடாகத் திறன் பிரச்சாரம்” (Door to Door Skill Campaign) நாளை நவம்பர் 21, 2026 அன்று நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில், பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களிலும் நாளைய தினம் இப்பிரச்சாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.


​”நீங்கள் உருவாகும் இடமே, நாடு உருவாகும் இடம்” (Where you grow, the nation grows) மற்றும் “தொழில் கல்வி மூலம் உலகை வெல்ல, இலங்கை இளைஞர்களைப் பயன்படுத்துவோம்” ஆகிய தொனிப்பொருள்களை மையமாகக் கொண்டு அரசாங்கம் இந்தத் தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. திறன் வளர்ச்சி என்பது ஒரு தனிநபரின் முன்னேற்றம் மட்டுமன்றி, ஒரு குடும்பத்தின் முன்னேற்றமாகவும் அமையும் என்ற நோக்கோடு, திறமையான, வேலைவாய்ப்பு மிக்க மற்றும் சுயசார்பு நிறைந்த சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும்.


​இப்பிரச்சாரம் கவனம் செலுத்தும் நான்கு முக்கிய துறைகள்:
​திறன் (Skills): தனிநபர்களின் திறன்களை அடையாளம் கண்டு அவற்றை வளர்த்தல்.
​வேலைவாய்ப்பு (Jobs): உள்ளூர் மற்றும் தேசிய மட்டத்திலான தொழில் வாய்ப்புகளுடன் இளைஞர்களை இணைத்தல்.
​தொழில் முயற்சி (Enterprise): புதிய தொழில்களைத் தொடங்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள தொழில்களை மேம்படுத்துதல்.
​டிஜிட்டல் (Digital): டிஜிட்டல் திறன் ஊடாக எதிர்காலத்திற்கான வழிகாட்டலை வழங்குதல்.


​மக்களுக்குக் கிடைக்கவுள்ள நன்மைகள்:


​இந்த வீடு வீடான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் முயற்சியின் ஊடாகப் பின்வரும் சேவைகள் நேரடியாக மக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்லப்படவுள்ளன.


​தனிநபர் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள்.
​தொழில் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான சரியான வழிகாட்டல்கள்.
​சுயதொழில் மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான ஆலோசனைகள்.
​நவீன டிஜிட்டல் உலகிற்கு ஏற்பத் தம்மைத் தயார்ப்படுத்துவதற்கான திறன் பயிற்சிகள்.
​”திறன் வளர்த்தால் – வாழ்க்கை உயரும்; நாடு செழிக்கும்!” என்ற உயரிய நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இந்தத் தேசிய வேலைத்திட்டத்திற்கு, கல்முனை வடக்கு பிரதேச மக்கள் அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் திறன் மேம்பாட்டு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *