குருக்கள்மடம் தூய பிரான்சிஸ் அசீசியார் ஆலய வருடாந்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது 04-10-2026
(க. டினேஸ்)
மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமைந்துள்ள குருக்கள்மடம் தூய பிரான்சிஸ் அசீசியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி, இன்று 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு, பங்குத்தந்தை அருட்பணி ஹர்சதன் ரிச்சர்ட்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் பக்திபூர்வமாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்ற மாலை வழிபாடுகள், இறைமக்களை ஆன்மீக ரீதியாக தயார்படுத்தும் வகையில், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கருப்பொருள்களை மையப்படுத்தி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. இவ்வழிபாடுகளில் கலந்து கொண்ட இறைமக்களுக்கு அருட்பணியாளர்களினால் அருள்மிகு சிந்தனைகளும் ஆன்மீக வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, திருவிழாவிற்கு முந்தைய சனிக்கிழமை மாலை வேஸ்பர் வழிபாடும், நற்கருணை ஆராதனையும் பக்தியுடன் இடம்பெற்றன.
இன்றைய திருவிழா கூட்டுத்திருப்பலிக்கு அருட்பணி லெபோன் சுதன் OMI அடிகளார்
(அதிபர், கார்மேல் பற்றிமா கல்லூரி, கல்முனை)
தலைமை தாங்கியதுடன், அருட்தந்தை பிறைனர் செலர், அருட்தந்தை கிறேசியன் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி ஹர்சதன் ரிச்சர்ட்சன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்து இறைவேண்டுதல் செய்தனர்.
திருப்பலியில் பெருந்திரளான இறைமக்கள் பக்தியுடன் கலந்து கொண்டு, தூய பிரான்சிஸ் அசீசியாரின் பரிந்துரையையும் இறையருளையும் வேண்டி சிறப்பாக வழிபட்டனர்.
திருப்பலி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தூய பிரான்சிஸ் அசீசியாரின் திருச்சுரூப பவனி ஆலயத்தைச் சுற்றி பக்தியுடன் இடம்பெற்றது. பவனியின் போது தூய பிரான்சிஸ் அசீசியாரின் புகழ்பாடல்கள் மற்றும் கவிகள் இசைக்கப்பட்டு, பக்திமயமான சூழல் நிலவியது.
இதனையடுத்து இறுதி செபம் இடம்பெற்றதுடன், தூய பிரான்சிஸ் அசீசியாரின் திருச்சுரூப ஆசீரை பங்குத்தந்தை அருட்பணி ஹர்சதன் ரிச்சர்ட்சன் அடிகளார் இறைமக்களுக்கு வழங்கி வைத்தார்.
மேலும், திருவிழா சிறப்பாகவும் இறைஅருளுடனும் நடைபெறுவதற்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பும் உதவிகளும் வழங்கிய அனைவருக்கும் பங்குத்தந்தையினால் நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
இத்திருவிழாவில் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பெருந்திரளான இறைமக்கள் கலந்து கொண்டு, ஒருவருக்கொருவர் திருவிழா வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
தூய பிரான்சிஸ் அசீசியாரின் இறைவேண்டுதலாலும் பரிந்துரையாலும், குருக்கள்மடம் பங்கின் அனைத்து இறைமக்களும் இறையருளிலும் சமாதானத்திலும் நம்பிக்கையிலும் என்றும் நிலைத்திருக்க இறைவனை வேண்டுவோம்.












